
1
கோழைக்கு மகிழ்வில்லை அவன் என்செய்த போதும்
வீரனுக்கு அச்சமில்லை அவன் எங்கு சென்றபோதும்
அமைவுற்றோனைத் தாழ்த்தும் தீங்கொன்றில்லை
அன்புகொண்டோர் சபிக்கப்படுவதில்லை
நின்னை அடையும்,
பெண்ணிற் பிறர்பொருளில் விழைவற்ற ஒருவன்
அஞ்சுதற்கு ஏதுமில்லை
ஓ சென்னமல்லிகார்ஜுனா, மல்லிகையின் மெல்லியோய்!
2
காத்திரு, காத்திரு பசியே
காத்திரு, காத்திரு தாகமே
காத்திரு, காத்திரு உறக்கமே
காத்திரு, காத்திரு விருப்பமே
காத்திரு, காத்திரு ஆத்திரமே
காத்திரு, காத்திரு உளமயக்கே
காத்திரு, காத்திரு பேராசையே
காத்திரு, காத்திரு பெருமிதமே
காத்திரு, காத்திரு சச்சரவே
நீங்கள் எல்லோரும், நகர்வன நகராதன யாவரும்,
காத்திருங்கள், காத்திருங்கள்: நான் ஒரு அவசர அழைப்பிற்கென காத்திருக்கிறேன்
சென்னமல்லிகார்ஜுனன், மல்லிகையின் மெல்லியோனிடமிருந்து
3
நாளை எது வரவேண்டுமோ
அது இன்றே என்னிடம் வரட்டும்
இன்று எது வரவேண்டுமோ
அது இக்கணமே வரட்டும்
அப்போது இப்போதென்று சொல்லவேண்டாம்
சென்னமல்லிகார்ஜுனா, மல்லிகையின் மெல்லியோய்
