கம்பனைக் காண்போம்—62/வளவ. துரையன்

மும்மதம்

தழல்விழி ஆளியும் துணையும் தாள்வரை
முழைவிழ கிரிநிகர் களிற்றின் மும்மத
மழைவிழும் விழும்தொறும் மண்ணும் கீழ்உறக்
குழைவிழும் அதில்விழும் கொடித்திண் தேர்களே [148]

[ஆளி=ஆண்சிங்கம்; முழை=குகை; கிரி=மலை;]

கம்பன் இப்பாடலில் முதலில் யானைகளுக்கு ஓர் உவமை சொல்கிறான்.களிறு என்பது ஆண்யானை. பெண்யானைக்குப் பிடி என்பது பெயராகும். அந்த ஆண் யானைகள் மலைபோன்று இருக்கின்றன. கம்பன் இப்போது அம்மலைகளைப் பற்றிக் கூறுகிறான். அம்மலைகளின் அடிவாரங்களில் நிறைய குகைகள் உள்ளன. அக்குகைகளில் நெருப்பைச் சொரிகின்ற கண்களை உடைய ஆண் சிங்கங்களும், அவற்றுக்குத் துணையாகப் பெண் சிங்கங்களும் வசிக்கின்றன. மலைகளைப் போன்ற அந்த ஆண் யானைகள் மதநீர்ப்பெருக்கைச் சிந்துகின்றன. மதத்தைக் கூடக் கம்பன் மும்மதம் என்கிறான். ஒருவேளைக் கம்பனுக்கு யானைச் சாத்திரம் தெரியும் போலிருக்கிறது. கன்னங்கள் இரண்டு, ஆண் குறி ஒன்று ஆகிய மூன்று இடங்களிலிருந்து யானைகளுக்கு மதநீர் பெருகுமாம். அந்த மதநீரானது வேங்கை மலர்போல வாசனை தரும் என்று கம்பன் 151-ஆம் பாடலில் குறிப்பிடுகிறான் அம்மத நீரானது ஆறு போலப் பெருகி ஓடி வருகிறது. மண்ணில் அந்நீர் விழும் இடம் குழியாகிச் சேறாகிறது. அச்சேற்றில் கொடிகளை உடைய வலிய தேர்கள் மேலே செல்ல முடியாமல் வழுக்கி விழும்.

“தேனருவி திரை எழும்பி வானின்வழி ஒழுகும்
செங்கதிரோன் தேர்க்காலும் பரிக்காலும் வழுகும்’

எனும் திரிகூடராசப்பக்கவிராயரின் குற்றாலக் குறவஞ்சியின் பாடல் அடிகள் நினைவுக்கு வருகின்றன.