எலி-எஸ்ஸார்சி சிறுகதை /நாகேந்திர பாரதி

எஸ்ஸார்சி அவர்களின் எலி என்ற இந்தச் சிறுகதை, எலி மயமான எளிமையான நகைச்சுவைக் கதை .
பலருக்கு நேர்ந்திருக்கக் கூடிய ‘வீட்டில் எலித்தொல்லை ’ அனுபவத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்து ‘ எலியினால் ஏற்பட்ட தொல்லை , எலியைப் பிடிக்கும் முயற்சி , முடிந்தபின் செய்யும் பரிகாரம் ‘ என்று மூன்றாகப் பிரித்துக் கொண்டு ஒவ்வொரு பகுதியிலும் நகைச்சுவையை அள்ளித் தெளித்துள்ளார் .
முதற்பகுதியில் வீடு முழுக்க எலிப் புழுக்கை என்று ஆரம்பித்து அதை விவரிக்கும் விதம் கொஞ்சம் நெளிய வைத்தாலும் , எலியால் நாயகன் பட்ட கஷ்டத்தை நமக்கு உணர்த்த வேறு வழி இல்லைதான் . நடு நடுவே மனைவியை வம்புக்கு இழுக்கும் விதத்தில் ‘ பிரம்ம முடிச்சின் பெருமை ‘ பற்றி ஒரு பாரா எழுதி , புராண விஷய தானமும் தருகிறார் . ‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்று மன்மதலீலை படத்தில் வரும் கண்ணதாசன் பாடல் வரிகளும் பிரம்ம முடிச்சில் இருந்து தோன்றியதுதானோ .
முதலில் நண்பர் சொல்படி சன்னல் கம்பி வலை போட்டு காசு செலவானதுதான் மிச்சம் . அதைக் கத்தரித்து உள் வந்து எலியின் களேபரம் தொடர்கிறது . பிறகு மனைவி சொல்லே மந்திரம் என்று எலி பிடிக்கும் பெட்டி வாங்கி உள்ளே வைத்த பண்டங்களை எல்லாம் எலியார் நாசுக்காய்ச் சாப்பிட்டு தப்பிக்கிறார் . கொலை வெறியோடு கொல்லும் எலிப்பொறியை வாங்க கடைக்குச் சென்றால் கடைக்காரன் முதல் நாளே வாங்கிய எலிப்பெட்டியை மாற்றிக் கொடுக்க மறுக்க , அதை அவன் கடை வாசலில் வைத்து விட்டு புதிய பொறியை முழு விலை கொடுத்து வாங்கும் காட்சியில் நகைச்சுவை கொட்டுகிறது எஸ்ஸார்சி அவர்கள் எழுத்தில் . ‘ பாவம் நாயகன். ‘ எண்ணித் துணிக கருமம் ‘ என்ற திருக்குறளை மறந்த நாயகன் திண்டாடும் நேரம் அது.


இந்த முறை ரத்தம் தெறிக்க செத்துக் கிடந்த அந்த சுண்டெலியைப் பார்த்து மனைவி பரிதாபப் பட , சமயம் பார்த்து வந்த பால்காரன் பரிகாரமாக ‘ பிள்ளையாருக்கு பால் அபிஷேகம் பண்ண சொல்லி தந்திரமாய் மீதம் இருந்த பாலை இவர்கள் தலையில் கட்டி , இல்லை இவர்கள் சொம்பில் கொட்டிப் போகும் மூன்றாம் பகுதி ஆரம்பமும் சிரிப்பு மழைதான் .
தெரு ஓரம் போட்ட செத்த எலியை நாய் தூக்கிப் போக , இவர்கள் வீட்டில் பரிகார பலகாரமாய் கொழுக்கட்டை செய்து பிள்ளையார் கோயிலுக்கு பாலோடும் கொழுக்கட்டையோடும் நடைப் பயணம் .போகும் வழியில் மனைவிக்கு வாங்கிக் கொடுக்கும் பூவில் மட்டும் கஞ்சத்தனம் காட்டும் புருஷனுக்கு மனைவியிடம் திட்டு .
இத்தோடு நின்றதா ‘எலி வதத்தின் ’ செலவுக்கு கணக்கு. ஜன்னல் கம்பிச் செலவு , எலிப்பொறிச் செலவு கொழுக்கட்டைச் செலவு , பால் செலவு எல்லாம் தாண்டி , ‘ பட்ட காலிலே படும் ‘ என்ற பழமொழிக்கு ஏற்ப பிள்ளையார் கோயில் குருக்களுக்கும் மீதம் இருக்கும் ஒரு மாச சதுர்த்திக்கு வருடா வருடம் சந்தா ரூபாய் கட்ட ஒத்துக்கொள்ளும் சங்கடமும் சேர்கிறது ‘ சங்கட ஹர சதுர்த்தியாக நாயகனுக்கு .
இப்படி எலிக்குப் பொறி வைத்து தானே செலவுப் பொறிகளில் மாட்டிக்கொண்ட நாயகன் வீட்டில் அதன் பின் எலித்தொல்லை இல்லையா என்ற கேள்விக்கு பதில் சொல்ல மாட்டேன் என்று முடிக்கிறார் எஸ்ஸார்சி .
எனக்கென்னவோ பிள்ளையார் , தனக்கு கொழுக்கட்டையாலும் , தனது வாகனத்திற்கு பாலாபிஷேகத்தாலும் சிறப்பு செய்த நாயகனின் பக்தியில் மகிழ்ந்து , அவருக்கு வீட்டில் உறுதுணையாக இருக்க , தனது வாகனத்தை அன்று இரவே ஒன்றுக்கு இரண்டாக அனுப்பி வைத்திருப்பார் என்றே தோன்றுகிறது .
நகைச்சுவைக் கதைக்குள்ளும் நல்ல பல கருத்துக்களாக ‘ மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம், எண்ணித் துணிக கருமம் , பட்ட காலிலே படும், விதி வலியது போன்ற கருத்துக்களையும் சொல்லியிருப்பது ரசிக்க வைக்கிறது
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த கதை.