இனிக்கும் தமிழ் – 160/டி வி ராதாகிருஷ்ணன்

மின்னலோடு வருகின்ற மேகம்

இராமாயணம்

இராமன் கருமை நிறம். “மையோ, மரகதமோ, மழை முகிலோ” என்பான் கம்பன்.சீதை மின்னல் போல் இருப்பாள். மின்னல் போல் இடை. மின்னல் போல் நிறம்.இராமனும் சீதையும் நடந்து வரும் போது மேகத்தோடு சேர்ந்து மின்னல் வருவதுபோல் இருந்ததாம்….

பாடல்:

மா கந்தமும், மகரந்தமும், அளகம் தரும் மதியின்
பாகம் தரும் நுதலாளொடு, பவளம் தரும் இதழான்,
மேகம் தனி வருகின்றது மின்னொடு என, மிளிர் பூண்
நாகம் தனி வருகின்றது பிடியோடு என, நடவா.

பொருள்:

மா கந்தமும் – சிறந்த நறுமணம் கொண்ட
மகரந்தமும் – மகரந்தம் கொண்ட பூக்களை சூடிய
அளகம் தரும்- கூந்தலை கொண்ட
மதியின்- நிலவின்
பாகம் தரும் -பாகம் போன்ற (பிறை சந்திரனைப் போன்ற)
நுதலாளொடு, – நெற்றியையை கொண்ட சீதையோடு
பவளம் தரும் இதழான்-பவளம் போன்ற சிவந்த இதழ்களை கொண்டவன்
(இராமன் வருவது)
மேகம் தனி வருகின்றது – ஒற்றை மேகம் தனியே வருகின்றது
மின்னொடு என, – மின்னலோடு என்று
மிளிர் பூண் – மிளிர்கின்ற அணி கலங்களை அணிந்த
நாகம் தனி வருகின்றது – ஆண் யானை வருகின்றது
பிடியோடு என – பெண் யானையோடு
நடவா – நடந்ததை போல இருந்தது

                        -