கம்பன் கவிநயம்—63/ வளவ. துரையன்


கடல் ஒலியை விஞ்சிய ஒலிகள்
வளைஒலி வயிரொலி மகர வீணையின்
கிளைஒலி முழவு ஒலி கின்னரத்து ஒலி
துளைஒலி பல்இயம் துவைக்கும் சும்மையின்
விளைஒலி கடல்ஒலி மெலிய விம்முமே [154]


[வளை=சங்கு; வயிர்=ஊதுகொம்பு; கிளை=வீணையின் ஒரு நரம்பு; முழவு=மத்தளம்; கின்னரம்-=ஒருவகைப் பறவை அல்லது ஓர் இசைக் கருவி; துளை=துளைக்கருவியாகிய புல்லாங்குழல்]

அயோத்தி நகரில் எழுந்த ஓசைகள் எல்லாம் கடல் ஒலியை விட மேம்பட்டு ஒலித்ததாம்; என்னென்ன ஒலிகள் எனக் கம்பன் பட்டியலிடுகின்றான். பல்வேறு சங்குகளை ஊதும் ஒலிகள் எழும்பிக் கொண்ட இருக்கின்றன. சங்குகள் மூவகைப்படுமாம். அவை வெற்றிச் சங்கு, மங்கலச் சங்கு, கொடைச் சங்கு ஆகியனவாம். அந்தந்த நிகழ்வுகளில் அவைஅவை ஒலிக்கும். எப்போதும் அந்நிகழ்வுகள் நிகழ்ந்தபடியே இருக்குமாதலால் சங்குகள் ஒலித்துக்கொண்டே இருக்கும். ஊதுகொம்புகளினோசை கேட்டுக்கொண்டே இருக்கும். மகர யாழின் பல்வேறு இனங்களை வாசிக்கும் ஒலி இருக்கும். மத்தளங்களின் ஓசையும் கின்னரத்தின் ஓசையும் கேடலாம். குழல் போன்ற துளைக்கருவிகளின் ஒலியும், இன்னும் பல்வகை வாத்தியங்கள் எழுப்புகின்ற ஒலிகளும் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டே இருப்பதால் அது கடல் ஒலியைவிட மேம்பட்டதாக இருக்கும்.