ஜே.கிருஷ்ணமூர்த்தி கதை/முழுமை

தமிழில் : பிரமிள்

 மலைகள் அந்த நகரை நோக்குகின்றன. அந்த நகர் கடலை நோக்குகிறது. மலர்களும் நிர்மலமான வானமும் தோன்றும் காலம் அது. மரங்கள் சூழ்ந்த ஒரு வீட்டில், ஒரு மனிதன். பொருள்கள் நிறைந்த  செல்வந்தன். பல்வேறு தலைநகரங்களில் ஒரு சிகிச்சையைத் தேடி அலைந்தவன். அவன் கால் ஊனமடைந்திருந்தது. நடப்பது அவனுக்குக் கடினம். 
 சூர்யவெளிச்சம் நிரம்பிய ஒரு தூரதேசத்திலிருந்து ஓர் அந்நிய மனிதன், ஒருநாள் தற்செயலாக அந்தக் கடலோர நகருக்கு வந்தான். ஒரு குறுகிய தெருவில் ஊனமடைந்தவனும் அந்நியனும் ஒருவரை ஒருவர் தொட்டு, எதிரும் புதிருமாகத் தாண்டினார். 
 ஊனமடைந்திருந்தவன் முழுமையடைந்தான். நகரம் திகைப்புடன் கிசுகிசுத்துக் கொண்டது. 
 மறுநாள் முழுமையடைந்தவன் சிறை வைக்கப்பட்டான் -  ஒழுக்கக்கேடான குற்றம் ஒன்றுக்காக.