போதும்/இளம்பிறை

எப்போதும்போல்
தனியாக
வெளியே சென்று
திரும்ப முடியும்வரை

துணிகளை உலர்த்தி
மடிக்க முடியும்வரை

நட்பிற்கான
தேநீரை
தயாரிக்க முடியும்வரை

மருந்து மணம் வீசா
அறையில் உறங்க
முடியும்வரை

புத்தகங்களை
அடுக்கி வைக்க முடியும்வரை

வாசிக்க முடியும்வரை

வலிமைமிகு சொற்களை
பேச முடியும்வரை

எப்போதாவதேனும்
எழுத முடியும்வரை

குருவிகளுக்கு
அரிசி அள்ளிப்போட முடியும்வரை

நின்னை
நினைத்திருக்க முடியும்வரை

இருந்தால் போதும் எனக்கு
உயிரெனும்
உற்சாக அனுபவம் .