குட்டிம்மாவின் பங்கு/கடற்கரய் மத்தவிலாச அங்கதம்

ஜப்பானுக்கு ஒரு மீன் தான்
குட்டிம்மாவுக்கு எப்போதும் இரு மீன்கள்

வீட்டையே சுற்றுபவள் அவள்
ஆகவே அந்தத் தட்டுக்கு கூடுதல் எடை

சாப்பாட்டின் எடையைப் போல்
அன்பு அப்படித்தான்
இரட்டிப்பாக்கி தருவாள் குட்டிம்மா

குழைய குழைய அவள் செய்யும் நடனம்
எந்த அழகியல் வரம்பிலும் அடங்காது
அவளது அங்க அசைவுக்குள்
ஆயிரம் தாள லயம்
ஒரு ஜோடி கண்களில்
ஒருபோதும் அடங்காத அதிசயம்

இரண்டு நாள்களாக
ஜப்பானின் தட்டில் கூடுதல் மீன்கள்
தனக்கு இடப்பட்ட ஒற்றை இறைச்சியை
அரக்கபரக்க முடித்து உண்டுவிட்டு
வெளியேற விழைகிறான்

மீண்டும் மீண்டும்
அவன் தட்டில் மீன்கள் துள்ளுகின்றன
குட்டிம்மாவின் பங்கும் அவனுக்குப் போகிறது
அதை உணர முடியாமல் குழம்புகிறான்

தனது பங்கை முழுமையாக
விட்டுக் கொடுத்துவிட்டாள் குட்டிம்மா
இனி ஒருநாளும்
அவள் பங்கை
அவளால் உண்ணவே முடியாது
இந்த ரகசியம் ஜப்பானுக்குத் தெரியாது

30நவ 2022 காலை :8.22