கம்பன் கவிநயம்—64/வளவ. துரையன்



பல்வேறு மண்டபங்கள்
மன்னவர் தருதிறை அளக்கு மண்டபம்
அன்னமென் நடையவர் ஆடு மண்டபம்
உன்னஅரும் அருமறை ஓதுமண்டபம்
பன்னஅரும் கலைதெரி பட்டிமண்டபம் [155]

அயோத்தி நகரில் இருக்கும் பலவகை மண்டபங்களை இப்பாட்டில் கம்பன் காட்டுகிறான். மன்னர்கள் பலரும் அரசனிடம் பலவகைப் பண்டங்களைத் திறையாக அதாவது வரியாகக் கொண்டுவந்து தருவார்கள். அப்பொருள்களை அளந்து வாங்க மண்டபங்கள் இருந்தன. அன்னம் போன்ற நடையைக் கொண்ட மகளிர் எல்லாம் நடனம் ஆடுகின்ற மண்டபங்களும் இருந்தன. நாம் நினைவில் வைத்துக் கொள்வதற்கு அருமையான வேதங்களை ஓதுகின்ற மண்டபங்கள் அங்கே இருந்தன. பலவேறு கலைகளை அதாவது சாத்திரங்களை ஆராய்ச்சி செய்கின்ற பட்டி மண்டபங்கள் அங்கே இருந்தனவாம்
பட்டி மண்டபம் “பகைபுறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும்” என்று சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. பட்டிமண்டபத்தினை வித்தியா மண்டபம், ஓலக்க மண்டபம் என்று அடியார்க்கு நல்லார் கூறுவார். மணிமேகலையில், “ஒட்டிய சமயத்துறு பொருள்வாதிகள், பட்டி மண்டபத்துப் பாங்கறிந்தேறுமின்” என்று வருகிறது. மேலும் “பட்டிமண்டபம் ஏற்றினை ஏற்றினை” என்று திருவாசகத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த மண்டபங்களைக் காட்டுவதன் மூலம் அயோத்தி செல்வம் கலைகள் கல்வி ஆகிய எல்லாவற்றிலும் சிறந்து விளங்கிற்று என்று கம்பன் காட்டுகிறான்.