
‘இலக்கியச் சிந்தனை’யும் சிறுபத்திரிகைகளும்
ஜூன் 29-ஆம் தேதி 1985 சனி மாலை சென்னை ஆழ்வார்ப்பேட்டை காந்தி நிறுவன மண்டபத்தில், லட்சுமணன், பாரதி ஆகியோரால் நிர்வகிக்கப்படும் ‘இலக்கியச் சிந்தனை’ கூடியது. இது கடந்த 15 வருஷங்களாக, தமிழ்ப்பத்திரிக்கைகளில் வெளிவரும் கதைகளுள், மாதாமாதம் எவராவது ஒரு பிரமுகரையோ இலக்கிய வாதியையோ கொண்டு, சிறந்த கதை என்று அவர் கருதுகிற கதைக்குப் பரிசளித்து வருகிறது. வருஷத்தில் சிறந்த கதைத் தேர்வும் உண்டு. இதன் விளைவாக எதுவும் இலக்கிய விழிப்பு பிறந்ததில்லை; சிந்தனை செழித்ததில்லை; வாதப் பிரதிவாதங்களுக்கு இடம் இராது. கதை பற்றிய விமர்சனங்களை, தேர்வாளர்கள் தங்கள் தேர்வுக்கு ஆதாரமாக எழுதி வாசிப்பார்கள். இது எவ்வித அலட்டலும் இல்லாமல் விழுங்கப்படும்; ஒரு தேர்வாளருக்கும் இன்னொருவருக்கும் இடையே, தரவேறுபாட்டின் விளைவுகளும் விழுங்கப்படும். மேற்படி தேதியில் திலீப்குமார், மே 1985 இல் வெளிவந்தவற்றுள் சிறந்ததாக, கணையாழியின் ‘மறதி’ (எஸ்.சங்கரநாராயணன்) கதையைத் தாம் தேர்ந்தெடுத்ததுக்கு ஆதாரம் தருகிறார். அது, ‘இந்தக் கதை ஆரவாரமற்று அமைதியாகச் சொல்லப்பட்டிருக்கிறது’ என்பதாகும். எங்குமே இத்தகைய ஒரு விமர்சன அளவுகோலை நான் சந்தித்ததில்லை. இலக்கியம் ஆரவாரமாகவும் இருக்கலாம், ஆரவாரமற்றும் இருக்கலாம். புதுமைப்பித்தன், லா.ச.ரா., பிச்சமூர்த்தி, மௌனி போன்றோரிடம் ஆரவாரம் இல்லை. நால்வருமே இலக்கியச் சாதனையாளர் தாம். நான் மேற்கத்திய உபகரணங்களுக்குச் செல்ல விரும்பவில்லை. சம்பந்தப்பட்டவர்களுக்கு அந்தப் பிராந்தியம் எட்டாதது. ‘அமைதி’யை எடுத்துக்கொள்வோம். ஆரவாரமின்மைக்கும் அமைதிக்குமிடையே வேறுபாடு கட்டுரையாளரால் காட்டப்படவில்லை. உயிரற்ற எழுத்தும் அமைதியானதுதான் – அந்த அமைதி, அதற்கு இலக்கியத் தகுதியைத் தந்துவிடாது என்று மட்டுமே இங்கு கூறலாம். ஆரவாரத்துடன், உணர்ச்சியின் கொந்தளிப்புடன், அமைதியின்மையை அமைதியற்று வெடிப்புற எழுதுவதும் இலக்கியமாகும்.
சங்கதி என்னவென்றால் கணையாழி, க்ரியா போன்ற நிறுவனத்தினர், உயிரற்ற எழுத்தை உயர்தர இலக்கியமாகப் பாவனை காட்டி வருகின்றனர் என்பதும், இவர்களுக்கு ஏற்றபடி விமர்சனங்களை எழுதப் புறப்பட்டவரே திலீப்குமார் என்பதுதான். ஜூன் 16இல் சென்னை தேவநேயப்பாவாணர் நூலரங்கத்தில், கௌரிஷங்கரின் முந்நூறு யானைகள் சிறுகதைத்தொகுதி வெளியீட்டில், திலீப்குமார் அந்தத் தொகுப்பைப் பார்த்த போதும் இதுவே புலனாயிற்று. கௌரி ஷங்கரின் கவித்வத்தை உணர்த்த வேண்டி பிரமிள், தொகுதியிலிருந்து ‘ஏது?’ என்ற கதையை உரத்துப் படித்துக் காட்டிவிட்டு, அதுவே பிரமிள் சொல்லவந்ததைச் சொல்லிவிட்டது என்ற அர்த்தத்துடன் அமர்ந்து விட்டார். வந்திருந்த ஒரு மிகச் சிலருக்கேயன்றி, வேறு எவருக்கும் இதன் தாத்பர்யம் புரியவில்லை.
‘இலக்கியச் சிந்தனை’க்குத் திரும்புவோம். கணையாழி கதையை விடவும் சிறந்ததாக, பதிவு பெறாத தனிச்சுற்றுச் சிறுபத்திரிக்கை ஒன்றில் (எதில்?) வந்த ஒரு கதை (தலைப்பு, ஆசிரியர், பெயர் யாவை?) சிறந்ததாகத் தேர்வாளருக்குப்பட்டிருக்கிறது. ஆனால் ‘இலக்கியச் சிந்தனை’யின் விதிமுறையில், தனிச்சுற்றுப் பத்திரிக்கையில் வருவன சேர்த்தியில்லை…! இந்த விதிமுறையினையே, தேர்வாளர் தமது கட்டுரையில் விஸ்தாரமாக விளாசி இருந்தார்; வேண்டியது தான். இதற்குப் பதில் கூறும்போது பாரதி, தனிச்சுற்றுப் பத்திரிக்கைகள் குறித்த தேதியில் வராமையைச் சுட்டிக் காட்டினார். மேமாதத் தேர்வுக்கு மேமாத இதழ் வராமல் அது ஜூன் – ஜூலையில் வந்தால் எப்படி என்ற அவரது வாதம் மட்டும் தான் அர்த்தமுள்ளது. தனிச்சுற்று பத்திரிக்கைகள் பல, அல்லது எல்லாமே இந்தக் குறையினைக் கொண்டவைதாம். இருந்தும், கணையாழி முதலிய பத்திரிகைகளில் ஏன் தனிச்சுற்றுப் பத்திரிக்கையாளர்கள் எழுதக் கூடாது என்றும் அவை தரமானவற்றை வெளியிடக் காத்திருக்கின்றன என்றும் பாரதி கூறியபோது, பிரமிள் அதன் தவற்றைச் சுட்டிக் காட்டினார். தி.ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டியைக் கணையாழி ஆரம்பித்த போது, அதற்கு ‘ஆயி’ அனுப்பப்பட்டது. இந்தக் கதை, கணையாழி தேர்ந்து கொண்ட இருபதுக்கும் மேற்பட்ட எந்தக் கதைகளினுள்ளும் வராமல் ஆசிரியருக்குத் திருப்பி அனுப்பப்பட்டு, இரண்டு ஆண்டுகளாகப் பிரசுர சாத்யமற்றுக் கிடந்திருக்கிறது. இது இப்போது லயம் என்ற தனிச்சுற்றுப் பத்திரிக்கையிலேயே வெளிவந்துள்ளது. வெளிவந்ததை வண்ணநிலவன் போன்றோர் படித்துவிட்டு, மிக உயர்வாகப் பாராட்டுகின்றனர். கணையாழி போன்ற பத்திரிகைகளை நம்பிக் காத்துக்கிடக்காததின் விளைவுதான் சிறுபத்திரிக்கை இயக்கம். இன்னும் ஒன்று: சிறுபத்திரிகைகள் சிலவற்றுடன் தொடர்பு கொண்டுள்ள அளவில் நாம் அறிய வந்த விஷயம் இது – அவை ‘இலக்கியச் சிந்தனை’யின் சங்கப்பலகைக்காக ஏங்கிக்கிடப்பவை அல்ல.
‘இலக்கிய சிந்தனை’யின் பாரதி, சிறுபத்திரிகைகளில் ஏதோ ஒழுங்கீனங்கள் நடப்பதாகவும், குறித்த தேதியில் வராமை ஒழுங்கீனம் என்றும் கூறினார். இலக்கியமும் சிந்தனையும் தீவிரமாகச் செயல்படும் போது, அவை இலக்கியப்பிறழ்வுகளையும் சிந்தனைப் போலிகளையும் அம்பலமாக்குகிற கடமையைக் கடுமையாகச் செய்யும். இதைத் தாங்கிக் கொள்ள இயலாதவர்கள் தாம், இந்தத் தீவிரத்தை ஒழுங்கீனமாகக் கற்பிக்கின்றனர். பெருவாரிப் பத்திரிகைகளில் ஆபாஸ அம்சங்கள், விற்பனை வியாபகத்துக்காக வெளிவருகின்றன. சமூகத்தின் ஆரோக்யம் பற்றியோ, உணர்வின் மென்மை, நுட்பம் ஆகியன பற்றியோ, பெருவாரி வியாபாரப் பத்திரிக்கைகளுக்கு அக்கறையில்லை. இதுதான் ஒழுங்கீனம். இந்த ஒழுங்கீனத்தின் விளைவான வியாபார லாபம், பத்திரிக்கையை ஒழுங்காகக் கொண்டு வருவதையோ பாரதி ‘ஒழுக்கம்’ என்கிறார். இப்படிப் போகிறது ‘இலக்கியச்சிந்தனை’. இது ஒழுக்கம் அல்ல – வசதி. இந்த வசதி, சிறந்த சிறுபத்திரிக்கைகளுக்கு லேசில் அமைவதில்லை. அது ஒழுக்கமின்மை அல்ல – பாரதத்தின் எல்லா ரிஷிகளுக்குமே இருந்து வந்திருக்கிற பொருளாதார வறுமை.
இதை எளினப்படுத்த முயன்றிருக்கிறது ‘இலக்கியச் சிந்தனை’. பார்க்கப்போனால், ‘இலக்கியச் சிந்தனை’யின் உள்நோக்கமே இங்கு வெளிப்படுவதாகத்தான் தோன்றுகிறது. பெருவாரி வியாபாரப் பத்திரிக்கைகளுக்கும் அவற்றின் வாசகர்களுக்கும் இலக்கிய உணர்வு இல்லை என்பது புதுமைப்பித்தன், க.நா.சுப்ரமண்யம் போன்றோரால் அவ்வப்போது அறுதியிடப்பட்ட விஷயம். இதை மழுப்புவதற்கு பெருவாரிப்பத்திரிகைகளின் அபிமானிகள் ஏதேதோ எல்லாம் செய்து வந்திருக்கிறார்கள். இந்தப் பெருவாரிப்பத்திரிக்கை அபிமானிகள், தங்களை இலக்கியவாதிகளாகக் காண விழைவதன் விளைவு இது. இலக்கியவாதிகள் மூலம் பெருவாரிப் பத்திரிக்கைகளினுள்ளே இருந்து சிறந்த கதைகளைத் தேர்வு செய்யும் ‘இலக்கியச் சிந்தனை’யின் அடிப்படை நோக்கம், பெருவாரிப்பத்திரிக்கை இயக்கமே ‘ஒழுங்கான இலக்கிய இயக்கம்’ என்று காட்டுவதுதானோ?
(பிரசுரமாகாதது)
