
காகம் ஒன்று
இறக்கைகளை அடித்துக் கொண்டு
மெல்லக் கீழிறங்கி
அமர இடம் தேடியது.
அனைத்து மரக் கிளையிலும்
அமர்ந்திருந்தன
ஏற்கனவே வந்து
இடம் பிடித்த பறவைகள்.
ஒதுங்க இடம் உண்டா என
ஓரக் கண்ணால்
பார்த்த காகம்
பார்த்தபடி பார்த்திருக்க
மற்றைக் கிளைப் பறவைகள் இந்த
ஒற்றைப் பறவையை
உதாசீனப் படுத்தியன.
வராதே என்பன போல்.
அங்குமிங்கும் நோக்கி
அயல் பார்வை கொண்டு
கழுத்தைத் திருப்பி
அருகில் மேய்ந்து கொண்டிருந்த
ஓர் எருமையின் முதுகில்
தவ்விப் பறந்து
அமர்ந்தது காகம்.
இறக்கைகளை அசைக்காமலேயே
அமர்ந்து கொண்டே
நகரத் தொடங்கியது காகம்.
