எஸ். சண்முகம் கவிதை

நிற்கும் இந்நேரத்திற்கு முன்புதான்
அருகிருந்ததை உணர்ந்தேன்
சொல்லாமல் நகரத் துவங்கியது
இடைவெளி

மெல்ல பின்னுக்கு தள்ளப்பட்ட
சுவடுகள் இன்னும் நீங்கவில்லை
ஏதுசெய்ய நான்

ஒவ்வொன்றாக தளர்ந்து பிரியும்
உறவிழைகளின் நுனியில்
சொற்கள் இடறிய போது
தொடராமை கணத்தது

யாரையோ பார்ப்பது போலொரு பாவனையில்
குரைத்தலுடன் நாய்கள் ஒன்றையொன்று
தொடர்கின்றன

சத்தமில்லா தெருவின் முழுமையில்
இருசக்கர வாகனமொன்றின் முன்விளக்கிலிருந்து
பாய்ந்து விரையும் வெளிச்சத்தில்

விளக்கற்ற தெருமுனையின்
பைசாச கருமைக்குள்ளிருந்து வெளியேறிய
இரு உருவங்கள் மறுகாணாமைக்குள் நுழைகிறார்கள்.