
கலியுகத்தின் விழிகளை
கண்டதுண்டோ தோழி?
பாலையின் இரவு
வற்றிப்போன பாற்கடல்
எடுப்பதற்கும் கொடுப்பதற்கும்
எதுவுமில்லை .
பசித்திருக்கும் பிறவி
எச்சில் இலைக்கு
காத்திருந்த நாட்கள்
கருக்கலின் தாகம்
விஷத்துளி அருந்திய இரவுகள்
தூக்கில் தொங்குவதற்குள்
சந்தித்தாக வேண்டும்.
சத்தியமாய் கேட்பதற்கு
எதுவுமில்லை.
துரோகத்தின் விழிகள்
கருவிழிப்படலம்
படபடக்கும் இமைகள்
முகத்தில் துருத்திக்கொண்டு
தொங்கும் நாக்கு
ரத்தக்கறை படிந்த பற்களில்
ஒட்டிக்கொண்டிருக்கும்
என் கனவுகளின் சதைத்துண்டுகள்
கவிதையின் கடைசிவரியை
எழுதுவதற்குள்..
அவன் தேசத்தின் நிழலை
மிதித்தாக வேண்டும்.
தோழி .. நினைவூட்டுவாயா
ஹே சென்னிமல்லிகார்ஜூனா..
தூங்காத உன் சுடுகாடுகள்
சாமுண்டிக்கு புதிதல்ல என்பதை.
