
கவிதை எழுத முயன்றால்
பிஞ்சுக் கரங்களால்
பேனாவை பிடுங்கியெறிந்து சிரிக்கிறாய்.
ஏதேனும் பேச முயன்றால்
கோலிக்குண்டு கண்களை சிமிட்டி
சிறு தலையை ஆட்டியபடி
பேசவிடாமல் செய்து விடுகிறாய்.
வெளியே தூக்கிப்போ என
உட்கார்ந்தபடி குதிக்கிறாய்.
தெருவில் இறங்கிச் சுமந்து
நாலடி நடந்தால்
வீட்டுக்குப் போகலாம் என
விரல் நீட்டி சிணுங்குகிறாய்.
வேலைக்கு கிளம்பினால்
நானும் வருவேனென
அபிநய அடம்பிடிக்கிறாய்.
விளையாட்டில் நீயிருக்கிறாய்
என நகர்ந்தால்
எங்களின் ஒவ்வொரு
அசைவையும் கண்காணிக்கிறாய்.
நீ இயங்கித் திரிகையில்
ஒரு வேலையையும் நினைத்தபடி
செய்ய முடிந்ததில்லை.
நீ உறங்கும் போது
மட்டுமென்ன
உன்னைக் காணாதபடிக்கு செய்ய
எங்களுக்கு
ஏதேனும் வேலையிருக்கிறதா
என்ன..?!
