வடியும் கோடை/வளவ. துரையன்

தர்ப்பூசணியும் வெள்ளரியும்
குளிர்பதநீர் இளநீர்களும்
தானாய் விடைபெறுகின்றன

முகமும் முதுகும் கருக்கும்படி
முழுவெயிலில் நனைந்தபடி
ஆடிய சிறுவர்கள்
அங்கலாய்த்துப் போகிறார்கள்

குட்டைகளும் குளங்களும்
கிணறுகளும் நீர்ப்புணர்ச்சிக்குத்
தயாராகின்றன

பூக்கள் பூத்த முகத்துடன்
புதுத்தளிர்களைப் பிரசவிக்க
தோட்டம் படுக்கையாகப்போகிறது

விடிவது தெரியாமல்
தானாய் மெல்ல விடியும் பொழுதுபோல
கோடை விடியத் தொடங்குகிறது