
ஜமக்காளம் விரிப்பான்;
வெற்றிலை பாக்கு கூஜாத் தண்ணீர்
எடுத்து வைப்பான்; தூசி தட்டிப்
புத்தகங்கள் அடுக்கி வைப்பான்
‘யாரடா பையன்’ என்றால்
வந்து நிற்பான்.
புலியென்றால் பால் கொணர்வான்
நிமிர்ந்து பதில் சொல்லான்.
‘உத்தரவு’ என்று ஒரு வார்த்தை மட்டுமே
அவன் அறிந்திருந்தான்.
அவன் இன்று மேடையேறிப்
பேசுவது கேட்டேன்
அடாடா! எப்படி மாறிவிட்டான்.
ஊரிலே தலைவன் என்று
அவனுக்கொரு கோஷ்டி
முனிசிபாலிடி அங்கத்தினன்.
அதற்கும் இதற்கும் செயலாளன்
நான்கு விஷயங்களையும்
நன்கு அறிந்தவன்
என்று அவனை இன்று புகழ்கிறார்கள்.
‘இதிலே என் பங்கு எத்தனை?’
என்று ஹாஸ்யமாகக் கேட்டேன்
‘எல்லாமே உங்களது தான்’
என்று நயமாக உரைத்தான்
நானும் தலைவனாகத்
தகுதியுள்ளவன் தானோ
என்று எனக்கே
சந்தேகம் தட்டியது.
