முள்ளிவாய்க்கால் துயர சம்பவம்../கே.என்.சிவராமன்

முள்ளிவாய்க்கால் துயர சம்பவத்துக்கும் தமிழகத்தில் சரித்திர நாவல்கள் அதிகரித்திருப்பதற்கும் தொடர்பு இருக்கிறதா..?

கிறது என்பதே புள்ளிவிபரங்கள் உணர்த்தும் செய்தி.

அமரர் கல்கிக்கு முன்பே தமிழகத்தில் ராஜா – ராணி கதைகளும்; வரலாற்று நாவல்களும் வர ஆரம்பித்துவிட்டன. என்றாலும் ‘பார்த்திபன் கனவு’, ‘சிவகாமியின் சபதம்’, ‘பொன்னியின் செல்வன்’ ஆகியவற்றுக்குப் பிறகே வெகுஜன தளத்தில் சரித்திர நாவல்கள் ஒரு பாய்ச்சலை ஏற்படுத்தியது.

என்றாலும் 2009ம் ஆண்டு வரை தமிழகத்தில் வெளியான வரலாற்று நாவல்களின் எண்ணிக்கை சற்றேகுறைய 1200தான்.

ஆனால், 2009 முதல் 2022 இறுதி வரை வெளியான – வெளியாக காத்திருக்கும் சரித்திர நாவல்களின் எண்ணிக்கை சுமாராக 1400. அதாவது வெறும் 13 ஆண்டுகளில் 1400 வரலாற்று நாவல்கள் வெளிவந்திருக்கின்றன.

இத்தனைக்கும் அரசியல் சார்புள்ள சரித்திர எழுத்தாளர்கள் பத்துக்கும் குறைவுதான். அவர்கள் எழுதிய வரலாற்று நாவல்களின் எண்ணிக்கையும் 10க்குள் அடங்கிவிடும்.

மற்றவர்கள் அனைவருமே அரசியல் சார்பற்றவர்கள். சொல்லப்போனால் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாதவர்கள்; அரசியல் அமைப்புகளுடன் தொடர்பில் இல்லாதவர்கள்; அரசியல் குறித்தே பேசவும் உரையாடவும் மறுப்பவர்கள்; அதுகுறித்த பிரக்ஞை இல்லாதவர்கள்.

அப்படியிருக்க அவர்களது சப் கான்ஷியஸில் முள்ளிவாய்க்கால் துயர சம்பவம் எப்படி ஆபரேட் ஆகிறது..?

இந்த பண்பாட்டு, கலாசார விவாதத்துக்குரிய புள்ளியைக் குறித்துதான் யோசித்து வருகிறேன்.

பைத்தியக்காரத்தனமாக இருக்கலாம்; காக்காய் உட்கார பனம் பழம் விழுந்த கதையாக முள்ளிவாய்க்கால் துயர சம்பவத்துக்கும் தமிழக சரித்திர நாவல்களின் பாய்ச்சலுக்கும் முடிச்சுப்போடுவதாக தெரியலாம்.

என்றாலும் சுற்றிச் சுற்றி இந்த முடிச்சில்தான் மனம் குவிகிறது.

ஏனெனில் கறு(ரு)ப்பு ஜூலை முதல் 2003 வரை பிறந்தவர்கள்தான் இன்று அதிகளவு வரலாற்று நாவல்களை எழுதுகிறார்கள்.

இதில் கணிசமான எண்ணிக்கையில் பெண்களும் இருக்கிறார்கள் என்பது பெருமைக்குரிய விஷயம்.

பிற்கால சோழர்கள் குறித்தே 40%க்கும் மேற்பட்டவர்கள் நாவல் எழுதியிருக்கிறார்கள்; எழுதுகிறார்கள். பாண்டியர்கள் குறித்து 20%. சங்ககாலம் குறித்து 15%. பல்லவர்கள் குறித்து 15%. சேரர்கள் குறித்து 5%. விஜயநகரம் – நாயக்கர் ஆட்சி குறித்து 3%. எஞ்சிய இரு சதவிகிதத்தினர் ஆங்கிலேயர் காலத்தை தொட்டிருக்கிறார்கள்.

அனைத்து நாவல்களின் அடிநாதமாக நாட்டுப் பற்று; தேசியம்; மன்னர் / வீரர் மீதான வழிபாட்டு உணர்வு… மேலோங்கி இருக்கிறது.

போலவே நாவலின் களத்தை பொறுத்து கோயில்கள், சைவம் – வைணம் குறித்த செய்திகளை அரசியல் சார்பில்லாமல் பதிவு செய்கிறார்கள். போற்றுகிறார்கள் என்றும் சொல்லலாம்.

முக்கியமான விஷயம், இஸ்லாமிய ஆண் – பெண் எழுத்தாளர்கள் தொடர்ந்து வரலாற்று நாவல்களை எழுதி வருகிறார்கள். தங்களது படைப்பில் தொடர்புள்ள மன்னர்களின் ஆலய வழிபாடுகள் குறித்து எவ்வித சாய்வும் இன்றி பதிவு செய்திருக்கிறார்கள்; செய்கிறார்கள்.

ஒரு விஷயம் உறுத்துகிறது.

இன்றும் அறியப்படும் ஆளுமையாக ஜெகசிற்பியன் திகழ்கிறார். கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இவரது ‘திருச்சிற்றம்பலம்’ இப்பொழுதும் போற்றத்தக்க ஒரு படைப்பாக கொண்டாடப்படுகிறது. தில்லையில் கோவிந்தராஜ பெருமாள் சிலையை கடலில் தூக்கிப் போட்ட குலோத்துங்கனை குறித்த இந்த நாவலில் எங்குமே மத வெறுப்பு இல்லை என்பது இப்படைப்பின் மிகப்பெரிய ப்ளஸ்.

இருந்தும் கிறிஸ்தவர்கள் எழுதும் வரலாற்று நாவல்களின் எண்ணிக்கை இன்று குறைவுதான். ஒட்டுமொத்த பார்வையில் ஒரு சதவிகித கிறிஸ்தவர்கள் கூட சரித்திர நாவல்களை இன்னும் எழுதத் தொடங்கவில்லை. இதற்கான காரணத்தை தேடுவதும் பண்பாட்டு கலாசார ஆய்வுக்கான புள்ளிதான்.

இப்புள்ளியை வைத்து என்ன செய்வது என்றுதான் தெரியவில்லை.