புதுமைப்பித்தன்../எம். ஏ. நுஃமான்

புதுமைப்பித்தன் இறந்தபோது எனக்கு நாலு வயது. நான் பிறக்கு முன்பே அவர் தமிழ்ச் சிறுகதையின் சிகரங்கள் சிலவற்றை
எட்டியிருந்தார் என்பதையும், பாரதிக்குப் பிறகு தமிழ் இலக்கியத்தின்
பிறிதொரு திருப்பு முனையாக விளங்கினார் என்பதையும் 1960களின் தொடக்கத்தில் எனது பதினேழு அல்லது பதினெட்டு வயதில்தான் முதல்முதல் அறிய நேர்ந்தது. என்னிடம் உள்ள புதுமைப்பித்தன் கதைகள், புதுமைப்பித்தன் கட்டுரைகள் ஆகிய நூல்கள் நான் 1962இல் வாங்கியவை. அப்போதிருந்து புதுமைப்பித்தனை அடிக்கடி படித்து வந்திருக்கிறேன். தொடர்ந்தும் சலிப்பில்லாமல் படிக்கக்கூடிய நவீன தமிழ் எழுத்தாளர் சிலருள் புதுமைப்பித்தன் முதன்மையானவர் என்பது என் அனுபவம். தீவிர தமிழ் வாசகர் பலரின் அனுபவமும் அவ்வாறே இருக்கலாம் என்பது என் நம்பிக்கை.

தற்காலத் தமிழ் இலக்கியம் பற்றிச் சிந்திக்கும்போது பாரதியையும் புதுமைப்பித்தனையும் அருகருகே வைத்துப் பார்க்காமல் இருக்க முடிவதில்லை. இருவருமே பெரும் சாதனையாளர்களாக அற்பாயுளில் மறைந்தது மட்டும் அதற்குக் காரணம் அல்ல. பாரதி கவிதையில் சாதித்ததைப் புதுமைப்பித்தன் சிறுகதையில் சாதித்தார். இருவருமே தற்காலத் தமிழ் இலக்கிய வரலாற்றில் புதுப்பாதை சமைத்தவர்கள்.

பாரதியின் காலத்தில் அவனுக்குச் சமமான அல்லது அவனுடன் ஒப் பிட்டுப் பேசக்கூடிய கவிஞர்கள் என்று யாருமே இருந்ததில்லை. ஆனால், புதுமைப்பித்தனின் சமகாலத்தில் அவரோடு ஒப்பிட்டுப் பேசக் கூடிய முக்கியமான சிறுகதை ஆசிரியர்களாக கு.ப.ரா., மெளனி, ந. பிச்சமூர்த்தி, பி.எஸ். ராமையா என்று சிலராவது இருந்தார்கள். ஆனால், இவர்களில் யாருமே புதுமைப்பித்தனைத் தாண்டி பாரதியின் அருகில் நிற்க முடியவில்லை. காரணம், புதுமைப்பித்தன்தான் பாரதி போல் தன்காலத்தில் ஒரு கலகக்காரனாகச் செயற்பட்டிருக்கிறார். புதுமைப்பித்தனின் கலகக் குரல் அவரது சமூக நோக்குச் சார்ந்தது. அதாவது, அவருடைய உள்ளடக்கம் சார்ந்தது. கவிதையில் பாரதி யிடம் ஒலித்த தீவிர இலக்கியக் குரலைப் புனைகதையில் அதன் பிறிதொரு வடிவத்தில் நாம் புதுமைப்பித்தனிடம்தான் கேட்கிறோம். புதுமைப்பித்தனின் சக எழுத்தாளர்களைச் சித்தாந்த சனாதனிகள் என்றால் புதுமைப்பித்தன் அவர்களில் இருந்து விலகி ஒரு கலகக் காரனாக, ஒரு எதிர்ச் சனாதனியாக பாரதியின் அருகில் இருக்கிறார்.


நன்றி: தமிழ் நேசன்