ஒரு நாளில் தஞ்சையை சுற்றி எட்டு கோவில்கள்/மாதவ பூவராக மூர்த்தி

“இந்த முறை நாம் திருச்சி போகும்போது தஞ்சை மாமணிக் கோவில் திவ்ய தேசமும் திருக்கண்டியூர் கோவிலும் போகணும்” என்றாள் பிருந்தா.

அப்பாவின் திவசம் நவம்பர் 17 வியாழக்கிழமை . தம்பி திருச்சியில் இருப்பதால் சீரங்கத்தில் நடத்துவதாக முடிவு செய்தோம்.16 நவம்பர் பல்லவனில் பிருந்தா என் தங்கை கீதா நான் மூவரும் போய் இரண்டாவது தங்கை ராதாவின் வீட்டில் இரவு தங்கினோம்.

திவசம் நன்றாக முடிந்தது.மதியம் இன்னொரு தங்கை ஹேமலதா, அவள் கணவர் ரவி, தம்பி ராஜகோபால், அவன் மனைவி கிருத்திகா எல்லாம் ராதா வீட்டில் ஓய்வெடுத்தோம்.

பிருந்தா தன் திட்டத்தை அறிவித்தாள். அதன்படி நான் தம்பி வீட்டில் திருச்சியில் தங்குவதாகவும் அவளும் ராதாவும் பஸ்ஸில் தஞ்சாவூர் போய் அங்கிருந்து ஆட்டோவில் கண்டியூரும், மாமணிக் கோவிலும் பார்த்து வருவதாக சொன்னாள். லதா ரவியுடன் அன்று இரவே சென்னை திரும்புவதால் அவர்கள் வரவில்லை என்றார்கள்.

கோபு,” நீங்கள் தஞ்சாவூர் பஸ்ஸில் போய் கஷ்டப்பட்டு பிறகு ஆட்டோவில் போவதற்கு இங்கிருந்தே காரில் போய்விடலாம்” என்றான் மறுநாள் காலை பல்லவனில் போவதாக இருந்த கீதா கார் என்றவுடன் எங்களுடன் வர சம்மதித்தாள். நானும் போகலாம் என்று முடிவு செய்தேன். ராதா தெரிந்த ட்ராவல்ஸ் விசாரித்தாள். “கோவிலடி போய் கண்டியூர், தஞ்சாவூர் மாமணிக் கோவில், பெரிய கோவில் பார்த்து வர எவ்வளவு?” என்றாள். அவர் கேட்டு சொல்வதாக சொல்லி ஐந்துநிமிடம் கழித்து 3400 என்றார்.

கோபு OLAவில் package டூரில் போகலாம் என்று சொன்னான். பார்த்தான். 10 மணி நேரம் 100 கி.மீ 1600/-.என்றான்.அதிலே போகலாம் என்றவுடன் கிருத்திகா புக் பண்ணி விட்டாள்.

நாளை 18 வெள்ளிக்கிழமை காலை 6.30. புக் ஆகிவிட்டது. பயணத்திற்கு பத்து நிமிடம் முன் டிரிப் கன்பர்ம் பண்ணுவதாக மெஸேஜ் வந்தது. லதா ரவி கோபுவுடன் புறப்பட்டார்கள்.நாங்கள் சீக்கிரம் படுத்தோம்.

காலை சீக்கிரம் எழுந்து குளித்துவிட்டு வாசலில் பூத்த பவளமல்லி தட்டில் எடுத்து கொண்டு நாரும் எடுத்துக்கொண்டு காபி குடித்து விட்டு காத்திருந்தோம். கால்டாக்ஸி டிரைவர் ஃபோன் பண்ணி விட்டு வந்தார். இளைஞர் பெயர் மோகன்.
வழக்கம்போல் ராதா முன் சீட்டில் வீட்டைச் பூட்டிக்கொண்டு வந்து உட்கார்ந்தாள்.பிருந்தா கீதா நான் பின்சீட்டில் அமர்ந்தோம்.மோகன் நான் அவர் பெயரை அழைத்து குட்மார்னிங் சொன்னதும் “உங்க முகம் ரொம்ப பரிச்சயமாக இருக்கு ஸார் முன்னால் நம்ம வண்டியில் டிராவல் பண்ணியிருக்கிங்களோ” என்றார். இல்லை என்றேன்.
“டி வி சீரியல்கள் சினிமாவில் பார்த்திருக்கலாம்” என்றேன். இன்னொரு முறை என் முகத்தைப் பார்த்தார்.
டூர் பிளான் சொன்னேன் “கோவிலடி, கண்டியூர் தஞ்சாவூர் மாமணிக்கோவில் எல்லாம் 12 மணிக்குள் பார்த்துவிடவேண்டும். பெரிய கோவில் மத்யானம் சாப்பிட்டு வந்து பார்க்கலாம்” என்றேன். பார்த்துடலாம் ஸார் என்று சொல்லி வண்டியை மிதமான வேகத்தில் செலுத்தினார்.

வழியெங்கும் பசுமை. கல்லணை வந்தது. காரை நிறுத்தி விட்டு நடந்து போய் பிரவாகமாக பாயும் காவிரியைக் கண்டு களித்தோம். ஃபோட்டோ எடுத்துக்கொண்டு புறப்பட்டோம்.

வழியில் SANTHOSHA BAKES & RESTAURANT சாலையின் இடது புறம் வந்தது. நிறுத்தி விட்டு காலை உணவை முடித்துக் கொண்டு புறப்பட்டோம். சுகாதாரமாகவும் சுவையாகவும் இருந்தது.மோகன் கிடைத்த நேரத்தில் ஃபோனில் சிலம்பாட்டம் ஜட்ஜ் வேடத்தில் என்னைப் பார்த்ததாக மகிழ்ச்சியுடன் சொன்னார்.

கோவிலடி அடைந்தோம். சிறிய கோவில்.இந்த திவ்ய தேசம் திருப்பேர்நகர் என்று அழைக்கப்படும்.இது பஞ்சரங்க க்ஷேத்திரத்தில் மூன்றாவது.

பெருமாள் அப்பக்குடத்தான்,அப்பாலரங்கன் (மேற்கு நோக்கி கிடந்த திருக்கோலம்)ஆராவயிற்றான் என்ற திருப்பெயரும் கூறுவது உண்டு.
தாயார்: இந்திராதேவி கமலவல்லி .
மங்களாசாசனம்: பெரியாழ்வார் திருமங்கையாழ்வார் திருமழிசை ஆழ்வார்
நம்மாழ்வார்.

பெருமாளின் வலது கரம் அருகே அப்பகுடம். இடது கரம் மேல் நம்மை நோக்கி இருக்கிறது..நாபிக்கமலத்தில் பிரம்மா இல்லை.

சன்னதி தெருவில் இடதுபுறம் முதல் வீட்டில் அப்பம் பிரசாதம் விற்பனைக்கு. பத்து ரூபாய் கொடுத்து ஒரு அப்பம் பிரசாதம் வாங்கி உண்டோம். கோவிலடி ரங்கராஜன் என்று ஒரு கர்நாடக இசைக்கலைஞர் இருந்தார். அவரின் நினைவு மேலோங்கியது.

அடுத்து திருவையாறு வழியாக திங்களூர் சென்றோம். சிறிய கோவில் நவகிரகங்களில் சந்திரன் இருக்கும் இடம் கைலாசநாதர் பெரிய நாயகி. சந்திரனுக்கு தனி சன்னதி. கூட்டம் இல்லை தரிசனம் செய்து புறப்பட்டோம் திருவையாற்றில் கோவிலுக்கு எதிரில் திரும்பும்போது காரை நிறுத்தி ஆண்டவர் அசோகா ஹோட்டலில் 100 கிராம் அசோகாவும் இரண்டு 100 கிராம் கோதுமை அல்வாவும் பிருந்தா வாங்கி வந்தாள்

திருக்கண்டியூர் கோவில் தஞ்சாவூர் செல்லும் பாதையில் சாலையின் வலதுபுறம் மேற்கு நோக்கி உள்ளது.
மூலவர் ஹரசாப விமோசனம் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.பலிநாதன் என்ற திருப்பெயரும் உண்டு. உற்சவர் கமலநாதன் வெளியில் புறப்பாடு கோலத்தில் நின்றார்.அர்ச்சகர் மூலவர் அருகில் துண்டுடன் நின்றார்.

தாயார் கமலவல்லி தாயார்

தீர்த்தம்: கமல மோஷ புஷ்கரணி, கபால மோஷ தீர்த்தம்,பலி தீர்த்தம், குடமுருட்டி ஆறு.

திருமங்கையாழ்வார் மங்களாசாசனம்.

தல விஷேசம் பிரமன் ஐந்தாவது தலையைக் கொய்து சாபத்தால் சிவன் கையில் பிரம்ம கபாலம்‌ ஒட்டிக்கொண்டது. கபால மோஷ தீர்த்தத்தில் நீராடி பிரிந்தது.
சிறிய திருவடி அனுமனும் பெரிய திருவடி கருடனும் சேர்ந்து காட்சியளிக்கும் தலம்.

தஞ்சை மாமணிக் கோவில் சென்றோம். இது நீலமேகம் பெருமாள்,மணிக்குன்றப் பெருமாள் மற்றும் நரசிங்கப்பிரான் கோவில் என்று மூன்று கோவில்களும் பக்கத்து பக்கதில் உள்ளன.இவை மூன்றும் சேர்ந்து ஒரே திவ்ய தேசமாக கருதப்படுகிறது.

நாங்கள் இரண்டாவதாக உள்ள மணிக்குன்றப் பெருமாளை முதலில் தரிசித்தோம்.
எம்பெருமான்: மணிக்குன்றப் பெருமாள்
தாயார்: அம்புஜவல்லி
தீர்த்தம்: ராமதீர்த்தம்.

அர்ச்சகர் இல்லை தாயாரையும் பெருமாளையும் தரிசித்தோம். கோவில் எதிரில் இருந்த ஒரு வீட்டில் குழந்தை டாடா சொன்னது. அதன் அம்மா வெளியே வந்தார் இதற்கு பின்னால் நீலமேகப் பெருமாள் கோவிலும் இதற்கு முன்னால் நரசிங்கப்பெருமாள் கோவிலும் இருப்பதாக சொன்னார். நன்றி சொல்லிவிட்டு முதல் கோவிலுக்கு போனோம் சிறிய கோபுரம் ஸ்ரீ நீலமேகப் பெருமாள். கோவில் அர்ச்சகர் இருந்தார். எம்பெருமான் ஸ்ரீ நீலமேகப் பெருமாள் கிழக்கு நோக்கி வீற்றிருந்த கோலம் தாயார்: ஸ்ரீ செங்கமல்லவல்லி
தீர்த்தம்: கன்னிகா புஷ்கரணி, அமிர்த நதி, வெண்ணாறு.

மூன்றாவதாக ஸ்ரீ நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு வந்தோம் எம்பெருமாள் நரசிங்கபிரான் கிழக்கு நோக்கி அமர்ந்த காலம் தாயார் தஞ்சைநாயகி தீர்த்தம் சூரிய புஷ்கரணி ஸ்ரீ ராம தீர்த்தம்.
கோவிலுக்குள் நுழைந்ததும் இடதுபுறம் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் சன்னதி உள்ளது அதையும் தரிசனம் செய்து கொண்டோம்.
இந்த மூன்று கோவில்களுக்கும் மங்களாசாசனம் பூதத்தாழ்வார் திருமங்கையாழ்வார் .

இவ்வூரில் பராசரர் ஒரு யாகம் செய்ய முயன்றார். அவர் விண்ணுலகில் இருந்து அமிர்தத்தை ஒரு குடத்தில் எடுத்துக் கொண்டு வந்து அமிர்த புஷ்கரணியில் மறைத்து வைத்தார் இதை தஞ்சகன் தண்டகன் தாரகன் என்ற மூன்று அசுரர்கள் தெரிந்து கொண்டு அமுதத்தை குடித்து வளம் பெற்று சிவபெருமானை நோக்கி தவம் செய்து மரணம் இல்லா பெருவாழ்வு வேண்டினர் சிவபெருமான் தனக்கு அந்த சக்தி இல்லை நான் உங்களை அழிக்க மாட்டேன் என்று வரம் கொடுத்தார் செருக்கடைந்த அவர்கள் பராசர முனிவரின் யாகத்திற்கு தீங்கு விளைவித்தார்கள். அவர் பெருமானை வேண்ட அவர் கருடனை அனுப்பினார். கருடனால் அவர்களுடைய படைகளை தான் அழிக்க முடிந்தது. பிறகு பெருமாளே நேரில் வந்து தஞ்சகனோடு போர் புரிந்தார் அவனை வெல்ல முடியவில்லை பிறகு அமிர்தம் தான் காரணம் என்று அறிந்து அன்னப்பறவையாக மாறி குளத்தில் இருந்த அமிர்தத்தை உண்டு விட்டார். இப்பொழுது வலிமை இழந்த தஞ்சகன் அவரிடம் மெய்யறிவு பெற்று தஞ்சமடைந்தான்.

அதனால் இந்த ஊர் தஞ்சகனூர் என்று அழைக்கப்பட்டது அது பிற்காலத்தில் தஞ்சாவூர் என்று மருவியது.நீலமேகப் பெருமாளின் காலடியில் தஞ்சகன் காட்சி அளிக்கிறார்.

தண்டகன் யானை வடிவில் வந்து போரிட்டதால் பெருமாள் நரசிம்மராக வடிவம் பெற்று அவனை வென்றார் அவன் அந்த இடத்திற்கு தன் பெயரால் தண்டகாருண்யம் என்று வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.

தாரகன் புகை வடிவமாக வந்த போது பெருமாள் மணிக்கொன்றமாக மலை உருவில் அவனை அழித்தார்.

அதை முடித்துக் கொண்டு புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு புறப்பட்டோம் இந்த மாதிரி கோவில்களுக்கு வரும்போது கோவிலுக்கு அருகில் கழிவறைக்கு ஏற்பாடு செய்வது யாத்திரிகர்களுக்கு உபயோகமாக இருக்கும் நாங்கள் வழியில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் ரெஸ்ட் ரூமை பயன்படுத்தினோம் பணி பன்னிரண்டு வெள்ளிக்கிழமை என்பதால் கோவில் திறந்திருந்தது வாசலில் பிச்சைக்காரர்களில் ஒருவர் மைக் இல்லாமல் மிக நல்ல குரலில் சினிமா பாடல் பாடிக்கொண்டிருந்தார் அது தனி கவனம் பெற்றது கோவிலுக்குள் நெய் விளக்கும் உப்பு வாங்கிக் கொண்டு போனோம் உப்பை பெட்டியில் போட்டு ஒரு மிளகு உப்பு பிரசாதமாக எடுத்துக்கொண்டோம் மேடையில் தீபம் ஏற்று விட்டு வர சிறப்பு தரிசன வாயிலில் பத்து ரூபாய் டிக்கெட் வாங்கிக் கொண்டு போய் நல்ல தரிசனம் பிரசாதம் வாங்கிக் கொண்டோம் நான் வெளியே வந்து அந்தப் பாடகருக்கு ஒரு பத்து ரூபாய் கொடுத்துவிட்டு வந்தேன் மோகன் கார் எடுத்து வர தஞ்சை நோக்கி புறப்பட்டோம்

கோவிலில் இருந்து மெயின் ரோட்டில் திரும்பும்போது வலது புறம் சாலையில் அன்னபூர்ணா உயர்தர சைவ உணவகமும் இடது புறம் வசந்த பவனும் இருந்தன இங்கேயே சாப்பிடலாம் என்று நினைத்தோம் பிறகு தஞ்சைக்கே போய்விடலாம் என்று முடிவு செய்தோம் கோபுவுக்கு போன் செய்து தஞ்சாவூரில் நல்ல ஹோட்டல் கேட்டோம் அவன் A2B
சென்னை சில்க்ஸ் அருகில் இருப்பதாக சொன்னான்.

இருந்தது உள்ளே போய் அமர்ந்து கொண்டோம். மோகனும் சாப்பிட்டார். ராதா கீதா பிருந்தா மூவரும் மீல்ஸ் சாப்பிட்டார்கள் நான் தயிர் சாதம் ஆர்டர் பண்ணினேன் சாப்பிட துவங்கும் போது அங்கு சாப்பிட வந்த ஒரு குடும்பத்தார் என் அருகில் வந்து உங்க ஃபேஸ் ஃபேமிலியரா இருக்கு என்றார் கொஞ்சம் நின்று என்னையே பார்த்துக் கொண்டிருந்தார் கீதா சீரியலில் பார்த்திருப்பீர்கள் என்றாள் அவர் முகம் பிரகாசமானது கர்மா சீரியல்ல பார்த்து இருக்கேன் ரொம்ப நல்லா நடிக்கிறீங்க என்று கண்டுபிடித்த திருப்தியுடன் என்னை பாராட்டி விட்டு சென்றார்

வெளியே வந்து தஞ்சை பெரிய கோவில் சென்றோம் நல்ல கூட்டம் மணி ஒன்னரை கோவில் 4:00 மணிக்கு தான் திறப்பதாக சொன்னார்கள் உள்ளே போய் செருப்பை வைத்து விட்டு பிரகாரத்தில் நிழலில் ஓய்வெடுத்தோம் எதிரில் நந்தி சிலை பிரம்மாண்டமாக வென்றது பிரம்மாண்டமாக இருந்தது

உயர்ந்த கோபுரம் மிகப்பெரிய வளாகம் எல்லாம் ராஜ ராஜனை மனதில் நினைக்க வைத்தது பேராசிரியர் கோ தெய்வநாயகம் பேச்சு தமிழா பேசு youtubeல் தஞ்சை கோவிலை பற்றி சொன்னவைகள் என் மனதில் வந்து போயின நிறைய ஃபாரினர்ஸ் வந்தார்கள் ஒரு பள்ளிக்கூடத்தில் இருந்து மாணவர்கள் எஸ்கர்ஷன் வந்திருந்தார்கள். ஒரு முறை நான் கல்லூரி படிக்கும் போது ராஜராஜன் சதய விழாவில் பேசி பரிசு வாங்கியது என் நினைவில் வந்து போனது அது ஒரு பொற்காலம்.

நாலு மணிக்கு கோவில் திறந்ததும் பிரகதீஸ்வரர் தரிசனம் செய்து பெரிய நாயகி அம்மனையும் தரிசனம் செய்தோம் வெளியே வந்து மோகனுக்கு போன் செய்து கார் வர ஸ்ரீரங்கம் திரும்ப கல்லணை வழியாக வந்தோம் திருவையாறில் வாங்கிய அல்வாவையும் அசோகாவையும் சுவைத்தோம்

ஸ்ரீரங்கம் வந்தவுடன் கோவில் வாசலில் நிறுத்தி பிருந்தாவும் ராதாவும் இரும்பு சேவை நாழி வாங்கி வந்தார்கள். கீதா எதிரில் இருந்த பில்டர் காபி கடையில் ஒரு காபி சாப்பிட்டு விட்டு காரில் இருந்த எனக்கு கொண்டு வந்து கொடுத்தாள். அவர்கள் வர வீடு திரும்பினோம் காலையிலிருந்து நிறைய கோவில்கள் பார்த்து அசதியாக இருந்தாலும், மனதில் திருப்தி இருந்தது தரிசனம் சிறப்பாக இருந்தது கோபுவுக்கு போன் பண்ணினோம் மோகனுக்கு நன்றி சொல்லி பணம் செட்டில் பண்ணினோம் பிருந்தாவுக்கு சந்தோஷமாக இருந்தது.மீண்டும் சந்திப்போம்.