இனிக்கும் தமிழ் – 164/டி வி ராதாகிருஷ்ணன்

மூதுரை..

மனைவி பற்றி மூதுரை சொல்வது என்ன தெரியுமா?

மனைவி வீட்டில் இருந்தால், இல்லாதது ஒன்றும் இல்லை. அவள் இருந்தால்
எல்லாமேஇருக்கும். அவள் வீட்டில் இல்லாவிட்டாலோ அல்லது அவள் கடுமையான சொற்களை பேசுபவளாய்
இருந்தாலோ, அந்த வீடு புலி இருக்கும் குகை போல் ஆகிவிடும்.

இல்லா ளகத்திருக்க இல்லாத தொன்றில்லை
இல்லாளும் இல்லாளே யாமாயின்-இல்லாள்
வலிகிடந்த மாற்ற முரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும்.

இல்லாள்- இல்லத்தை ஆள்பவள்,
அகத்து இருக்க – வீட்டில் இருந்தால்
இல்லாதது ஒன்றில்லை- வீட்டில் இல்லாதது ஒன்றும் இல்லை. (எல்லாம்
இருக்கும் )
இல்லாளும் -மனைவியும்
இல்லாளே ஆமாயின் -இல்லாமல் போய் விட்டால் (இறந்து விட்டால்)
இல்லாள் – (அல்லது) அந்த மனைவி
வலி கிடந்த – வலி தரும்
மாற்றம் உரைக்குமேல் – மற்றவைகளை (சுடு சொற்களை) பேசினால்
அவ் இல்- அந்த வீடு
புலி கிடந்த – புலி வசிக்கும்
தூறாய் விடும் குகைபோல ஆகி விடும்