இனிக்கும் தமிழ் – 165/டி வி ராதாகிருஷ்ணன்

திரிகூடராசப்பக் கவிராயர் எழுதிய திருக்குற்றாலக் குறவஞ்சி என்னும்
நூலில் உள்ள ஒரு பாடல் இது.

“எங்கள் நாட்டில், ஊரைத்துறந்து ஓடுவது ஆற்றுவெள்ளம் மட்டுமே. ஒடுங்கிக்
கிடப்பது யோகிகளின் உள்ளம் மட்டுமே. வாடி இளைத்திருக்கக் காண்பது
பெண்களின் மின்னல் இடை மட்டுமே. வருந்தியிருப்பது என்றால் தொடர்ந்து
முத்துக்களை ஈனும் சங்கு மட்டுமே. நிலத்தில் போடுவது நெல்விதைகளை
மட்டுமே. புலம்புவது பெண்களின் கிண்கிணிச் சிலம்புகள் மட்டுமே. இங்கு
தேடுவது நல்லறத்தையும் புகழையும் மட்டுமே. இப்படிப்பட்டது எங்கள் நாடு”.

ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்
ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்
வாடக் காண்பது மின்னார் மருங்குல்
வருந்தக் காண்பது சூலுளை சங்கு
போடக் காண்பது பூமியில் வித்து
புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து
தேடக் காண்பது நல்லறம் கீர்த்தி
திருக்குற்றாலர் தென் ஆரியநாடே.

தமிழ்நாட்டில் தென்காசிக்கு அருகில் உள்ள தனது நாட்டை, ‘தென் ஆரியநாடு’
என்று இந்தப் புலவர் குறிப்பிடுவதைக் கவனிக்க வேண்டும். மேன்மையான நாடு என்ற பொருளில், அதுகாறும் தமிழர்கள் ஆரிய என்ற சொல்லை அர்த்தப்படுத்திக் கொண்ட வகையிலேயே தான் இவரும் பயன்படுத்தியிருக்கிறார்.