கம்பனைக் காண்போம் 65/வளவ.துரையன்

அயோத்தி மரம்

ஏகம்முதல் கல்விமுளைத்து எழுந்துஎண்இல் கேள்வி
ஆகும்முதல் திண்பணை போக்கி அரும்தவத்திது
சாகம் தழைத்து அன்பு அரும்பித் தருமம் மலர்ந்து
போகக் கனிஒன்று பழுத்தது போலும் அன்றே [168]

[ஏகம்=விதை; ஆகு=கேள்வி; பணை=கிளை; சாகம்=இலைகள்; போகம்=இன்பம்]

அயோத்தி நகரமே இப்பாடலில் ஒரு அழகிய மரத்திற்கு உருவகப்படுத்தப்பட்டுள்ளது. அந்நகரத்தில் கல்வி, கேள்வி, அன்பு, தவம், தருமம் எல்லாம் மேலோங்கி இருந்தன. முதலில் கல்வி எனும் விதை முளைத்தது. அது மரமானது. அம்மரத்தில் கேள்வி என்னும் கிளைகள் வளர்ந்தன. கேள்விதான் கல்வியை மேலும் வளர்க்கும். அதுபோல கிளைகளே மரத்தை வளர்க்கும். அரிய தவமாகிய இலைகள் தழைத்தன. அன்பாகிய அரும்பு தோன்றியது. அது தருமமாகிய மலராக மலர்ந்தது. இன்பமாகிய பழம் பழுத்தது.

தவம், அன்பு, தருமம், இன்பம் எல்லாமே கல்வியால் வருவன. எனவே அவற்றை இந்த வரிசைப்படி கூறினார். இப்பாடலில் ஏகம் என்பது இட்ச்வாகு வம்சத்தைக் குறிக்கும் என்பர். போகம் என்பது பெண், ஆடை, அணிகலன், உணவு, தாம்பூலம், நறுமணப்பொருள், பாட்டு, பூம்படுக்கை ஆகிய எட்டுவகைப் போகங்களைக் குறிக்கும்.

இத்துடன் நகரப் படலம் முற்றியது.