09/12/22 அன்று விருட்சம் கதை கூடுகையில் படித்த விமர்சனம்/பானுமதி

இது திரு க நா சு அவர்களின் குடும்பம் கதை தொகுப்பிலிருந்து ‘ஒரு கடிதம்’ என்ற சிறுகதை. 1944 இல் எழுதப்பட்டுள்ளது.

ஒரு எளிய கருவை எடுத்துக்கொண்டு மிக அருமையான நடையில் நுட்பமான செய்திகளை இதில் சொல்கிறார் அவர். ஜெகன்னாதனுக்கு ஒரு கடிதம் வருகிறது. சிறிய நீல நிற உறை யுடன் கூடியது. தபால்காரர் அணிந்துள்ள காக்கிச்சட்டையின் முதுகில் மஞ்சள் வெள்ளை சுண்ணாம்பு படிந்துள்ளது. இன்றைய நாகரீகத்தின் சின்னம் என்று அதை அவர் சொல்கிறார் அழுக்கு காக்கியில் திட்டத்திட்டாக வண்ணங்கள். அதைப் போலத்தான் நம் வர்ண விஸ்தாரங்கள்; அகஸ்மாத்தாக, திட்டுத்திட்டாக நம் மீது படிந்தவை. மிக நுட்பமான செய்தியை இந்த இடத்தில் அவர் சொல்கிறார். உள்ளும் புறமும் அரசு செலுத்திய அழுக்கு என்பது அவரது கண்ணோட்டம்.

தபால்காரர், கொடுத்திருக்கும் தபாலில் நல்ல செய்தியாக கெட்ட செய்தியா என்று கூட நினைத்துப் பார்ப்பதில்லை. கடமை என்று வரும்போது உணர்ச்சிகள் இடம்பெறுவதில்லை. அதனால் ஈடுபாடும் இருப்பதில்லை. இதுவும் ஒரு அருமையான செய்தி. கடமை என செய்யும் போது ஈடுபாடு என்பது குறைந்து போகிறது.

இதையெல்லாம் நினைக்கும் ஜெகன்னாதனுக்கு உண்மையில் கசப்பு ஒன்றுமில்லை, ஏமாற்றமும் இல்லை அவனிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லை, யாரிடமும் வேலை செய்யவும் இல்லை முன்னோர்கள் புண்ணியத்தில் நில புலன்கள் இருக்கின்றது அவனும் அதை அழிக்க க்கூடியவன் இல்லை. நேர பரபரப்பில் இயங்கக்கூடிய உலகத்தை நிதானமாகச் சிந்திக்கிறான் கதாநாயகன். ஒரு மைல் நடந்து போய் ஊரார் சொன்ன ஐயங்கார் காபி கடையில் குடித்த காப்பி இன்னமும் கசப்பும் விறுவிறுப்புமாக வாயில் இருப்பதன் விந்தை தான் என்ன? இது மிக அழகான ஒரு அவதானிப்பு. அனைவரும் கொண்டாடும் ஒன்று, நம்மிடம் கசப்பாக தங்கி விடுகிறது

அவன் நினைக்கிறான் மனைவி ஜெயம் வரும் வரை இதற்கும் பழக வேண்டுமே என்று. ஒருக்கால் இப்போது வந்துள்ள அவள் எழுதிய கடிதமமோ? கோவையில் உள்ள அவள் சிநேகிதி எழுதியததோ? அவள் கடிதங்கள் நாலணா பில்லைகள் ஒட்டி அல்லவா வரும்?

இது மணிமணியான கையெழுத்தில் சாய்வும் கதியும் கொண்டுள்ள பெண் கையெழுத்து. உள்ளேயும் ஒற்றைத் தாள் தான் இருப்பது போல் தோன்றுகிறது.

குடும்பம் ஆரம்பித்த நாட்களில் அவனுக்கு வந்த ஒரு கடிதத்தை அவன் மனைவி பிரித்துப் படிக்கிறாள். அது ஒன்றும் முக்கியமான கடிதம் இல்லை. லாகூரில் உள்ள அவனுடைய சினேகிதன் தன் சுய புராணத்தை எழுதியது தான். ஆனாலும் பிறருக்கு வந்த கடிதத்தை பிரித்து படிக்கலாமா என்று இவன் கேட்க, கணவனுக்கும் மனைவிக்கும் இடையே பிறர் என்பது உண்டா என்று அவள் சொல்ல, உனக்கு வரும் கடிதத்தை நான் படித்தால் நீ என்ன நினைப்பாய் என்று அவன் விளையாட, அப்போது பாருங்களேன் என்று அவள் பதில் சொல்லிவிட்டு தன்னுடைய கோட்டையான சமையலறைக்குள் போய்விடுகிறாள். கோவை ஃப்ரண்டிடமிருந்து மறுநாள் வந்த கடிதத்தை ‘நான் இப்போது பிரிக்கப் போகிறேன்’ என்று இவன் விளையாட, அவள் பிடுங்கப் பார்க்க, முடியாது திகைத்து முகம் சிவக்க அவன் சிரிக்க அவள் தன் கணவன் தன்னை கேலி செய்கிறான் என்று நினைத்து உள்ளே போய் விடுகிறாள். பிரிக்காத கடிதத்தை அவளிடம் கொடுத்து விடுகிறான். அந்த கடிதத்தில் அப்படி ஒன்றும் பிரமாதமான விஷயம் இல்லை என்பதையும் ஊகித்து புரிந்து கொள்கிறான் அவள் தன் கடிதங்களை கைப் பெட்டியில் வைத்து பூட்டிக்கொண்டு, சாவியையும் தாலியில் முடிந்து வைத்துக் கொள்கிறாள்.

இந்த நினைவில் அவனுக்கு புன் சிரிப்பு வருகிறது. காலை ஒன்பது மணிக்கு எவ்வளவு வெயில் என்று தோன்றுகிறது ஆடி மாத காற்றுக்கு ஆனியிலேயே அவசியம் என்ன என்ற சிந்தனை போகிறது அது மணலை வாரி இறைக்கிறது முனிசிபாலிட்டியின் உதவியால் சிறு சிறு காகிதத் துண்டுகள் காற்றில் பறந்தலைகின்றன. இந்த அவதானிப்பும் அழகான ஒன்று. காலம் தவறி அடிக்கும் காற்று மனிதன் தன் வாழ்வில் இழக்கும் தருணம். வெறும் குப்பைகளை மட்டுமே கிளரும் நினைவுகள்.

அவன் கலாசாலையில் படித்த போது லீலா என்ற ஒரு பெண்ணைக் காதலித்தான் அவளும் அவனை விரும்பினாள். வேறொரு இடத்தில் அவளுக்கு கல்யாணம் ஆகிவிட்டது. ஏமாற்றமும் கசப்பும் இருந்தாலும் இருவருக்கும் வாழ்க்கையில் பற்று இருந்தது. ஆழமான நேசமும் ஆழமான ஏமாற்றமும் உண்மையில் ஏற்பட்டிருந்தாலும் அதைக் கடந்து செல்லும் மனோதிடம் இருவரிடமும் இருந்தது. அவனுக்கு நாலைந்து வருடங்கள் ஆனது லீலாவை மறக்க. தேவதாசை போல அவன் ஏமாற்றத்தைச் சுமக்கவில்லை.

கடிதத்தை கையில் வைத்துக் கொண்டே பிரிப்பதா வேண்டாமா என்று சிந்திக்கிறான். ஒருக்கால் அதில் இன்னொரு ஜெகன்னாதன் பற்றிய செய்தி இருக்குமோ எனவும் நினைக்கிறான். இந்தியக் கணவன்மார்கள் இப்படி நினைப்பார்கள் என்பதும் வெளிவருகிறது. ஆனாலும் அவனுக்கு அதில் பெரிய நெருடல் இருக்காது எனவும் தோன்றுகிறது. அவளும் கலாசாலையில் மேல் படிப்பு படித்தவள். அவளுக்கும் லட்சியங்கள் இருந்திருக்கலாம்.

‘இந்தக் கடிதத்தைப் படிப்போம் முக்கியமான செய்தி இருந்தால் அவளுக்கு சொல்லி விடலாம், தனக்குத் தெரியக்கூடாத செய்தி என்று தன் மனைவி நினைக்கக்கூடிய ஒன்றானால், இந்த கடிதம் வந்ததையே மறைத்து விடலாம் என்றெல்லாம் எண்ணி கவரைப் பிரிக்கிறான். ஆனாலும் கடிதத்தை உடனே படிக்கவில்லை.

ஒரு மாதிரி மனதை சமாதானம் செய்து கொண்டவன் அதை படிக்கும் போது அது லீலா தன் மனைவிக்கு எழுதிய கடிதம் என்றும் புரிந்து கொள்கிறான். லீலா கல்கட்டாவில் கல்யாணமாகி சென்றதாகவும் தற்போது கோயம்புத்தூர் வருகையில் செல்லத்தை பார்த்ததாகவும் ஜெயத்தின் கல்யாணம் பற்றி அறிந்து கொண்டதாகவும் எழுதி இருக்கிறாள்.

“இந்திய வாழ்க்கை முறையில் என்ன அமைகிறதோ அதை ஏற்றுக் கொண்டு, குடும்பத் தொல்லைகளிலும் குழந்தைகளின் பிடுங்களிலும் தங்கள் ஏமாற்றத்தை பெண்கள் போக்கிக் கொண்டு விடுவார்கள். இதைப் பற்றி வானொலியில் ஒரு யுவதி பேசியதை நான் கேட்டேன். காதல் என்பது வார்த்தை. குடும்பம் என்பது வாழ்க்கை. நீ லட்சியத்தை எல்லாம் மறந்துவிட்டு குடும்பத்தில் கரைந்து விடு. விரைவில் குழந்தை பெற்றுக்கொள். பின்குறிப்பு உன் கணவர் ஜெகநாதனும் நானும் கலாசாலையில் பரிச்சயமானவர்கள் அவருக்கு என் நினைவு இருக்கக்கூடும்.”

நிதானமாகஸ் சிந்திக்கும் ஜெகன்னாதன் இந்தக் கடிதத்தால் எண்ணங்கள் அலைபாய நிற்கிறான். பெண்களுக்கோ, ஆண்களுக்கோ வாழ்க்கை என்பது இதுதானா என்ற கேள்வியும் எழுகிறது. ஆனால், அந்தக் கடிதத்தில் தெளிவான பதிலும் இருக்கிறது என்று அவனுக்கு தோன்றுகிறது.

அந்த நேரம் வாசல் கதவை யாரோ தட்ட, திறக்கும்போது அவன் மனைவியும் மாமனார் வந்திருக்கிறார்கள். “உங்களுக்கு உடம்பிற்கு என்ன? இப்போது தேவைலையா?” என்று மாமனார் கேட்கிறார். ‘அவருக்கு உடம்பு சரியில்லை, நான் போக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து ஜெயம் என்னை கூட்டிக் கொண்டு வந்து விட்டாள். நான் உடனடியாகத் திரும்ப வேண்டும் ‘என்று மாமனார் சொல்கிறார்.

கூடத்தில் கையில் கொண்டு வந்திருந்த கூஜாவைக் கூட கீழே வைக்காமல் மேஜையின் மீது திறந்திருக்கும் கடிதத்தை இவன் மனைவி படிக்கிறாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கும் போது யார் முகம் அதிகமாக சிவந்தது என்பது சொல்ல முடியாத ஒன்று என்று ஆசிரியர் சொல்கிறார். அவன் அவளிடம் சென்று பெண் குழந்தை பிறந்தால் லீலா என்ற பெயர் வைக்கலாம் ஆண் குழந்தையாக இருந்தால் என்று கேட்கிறான். நாலைந்து மாதம் இருக்கிறதே அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று அவள் பதில் சொல்கிறாள்

ஒரு கடிதம் அதன் உளவியல், ஒரு தபால்காரர் அவர் காட்டும் உணர்ச்சியற்ற கடமை, ஒரு காபி நாக்கிலே தங்கும் விறுவிறுப்பு, காலத்திற்கு முன்னால் அடிக்கும் காற்று அதில் பறக்கும் தூசி, பிறர் கடிதத்தை படிப்பதற்கு மனம் செய்து கொள்ளும் சமாதானம், முடிவில் உண்மையை ஏற்றுக் கொள்ளும் மனோ பக்குவம் என்று அற்புதமாக எழுதப்பட்ட கதை.

மூவருமே கலாசாலையில் படித்தவர்கள். அதில் இருவர் காதலித்திருக்கிறார்கள். பெண்கள் இருவரும் நட்புடன் இருந்திருக்கிறார்கள். ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் நடந்திருக்கிறது.

ஒரு கடிதம்/க.நா.சுப்ரமண்யம் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)