நினைத்தார்கள் நினைத்திருந்தேன்/
லட்சுமி மணிவண்ணன்

1
இடையில் இறந்து விடுவேன்
என்றே எல்லோரும்
நினைத்தார்கள்
நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன்
2
போலியான அன்பில்
வலிந்து
வழியனுப்ப
வாகனத்தில் என்னை ஏற்றிக் கொண்ட நண்பன்
வழியில் வருவோர் போவோரையெல்லாம்
திட்டி கொண்டே வருகிறான்
ஏன் இந்த அளவிற்கு
என்னைத் திட்டிக் கொண்டே வருகிறாய் ?
என்று கேட்டேன்
3
அவன் என்னைத் திட்ட
அது என்னுள்
வந்தமர்கிறது
நான் மற்றொருவனை திட்ட
அவன் மற்றொருவரிடம்
கொண்டு சேர்கிறான்
யாரின் அகத்தளம் இது என்றே தெரியவில்லை
நடந்து முடிந்த
விபத்திற்கு
4
நல்லபடியாகப் பேசினால்
நல்லபடியாக நினைத்துக் கொள்கிறார்கள்
மற்றபடி நடத்தையில் ஒன்றுமில்லை
5
கூப்பிடும் தூரத்திலே
எல்லாமே இருக்கின்றன
துயரத்தை அழைப்பவனிடம்
துயர் வந்து சேருகிறது
என்னை எப்படி நீ அடையாளம் கொண்டு
கொண்டாய் என
அவன் கேட்கிறான்
நீதானப்பா அழைத்தாய் என
அது
திருப்பிக்
கேட்கிறது
6
தூய அன்பு
நரபலி
கேட்கும்
பலியானவன் மீதே
அன்பெனக் கதறும்
7
மதிக்கத் தெரியாதவனுக்கு
செயல் இல்லை
8
ஒரு வயல் உருவாவதற்குத் தேவையான
சோறு
உன் தட்டில் இருக்கிறது
எத்தனை பேர் சேர்ந்து இழுத்து
வந்து சேர்த்திருக்கிறார்கள்
ஒரு நேரத்திற்கான மதிய உணவை
நீ என்ன நினைத்து கொண்டு சாப்பிடுகிறாயோ
9
வார்த்தைகள்
அப்படியப்படியே முளைக்கின்றன
பொய் சொன்னால் பொய்யாக
மெய் சொன்னால் மெய்யாக
10
உண்மை என்பது
ஏராளம்
கதாபாத்திரங்களால்
ஆனது