அஞ்சலட்டைக் கதை
அழகியசிங்கர்

ராம் குமாருக்கு நிழலுடன் பேசப் பிடிக்கும். அவன் கண்ணில் படுகிற நிழல் மௌனமாக அவனுடன் உரையாடும். எதிர்காலம், நிகழ்காலம் எல்லாம் நிழல் உரையாடிக் கொண்டிருக்கும்.
ஒருமுறை ராம் குமாரைப் பார்க்க அவன் நண்பன் வந்திருந்தான். ராம் குமார் நண்பனின் நிழலைப் பார்த்துப் பேச ஆரம்பித்தான். அந்த நிழல் அவனுக்கு ஏற்படப்போகும் விபத்தைப் பற்றிக் குறிப்பிட்டது. ‘அதைத் தவிர்க்க முடியாதா என்று நிழலிடம் கேட்டான். முடியாது என்று சொல்லிவிட்டது நிழல். ஆனால் அவன் உயிருக்கு ஆபத்தில்லை என்றும் கூறியது.
நிழல் கூறியதை அவனால் முதலில் நம்ப முடியவில்லை. உண்மையில் அவன் நண்பனுக்கு சில தினங்களுக்குப் பிறகு பெரிய விபத்து நடந்தது. அதிலிருந்து தப்பித்து விட்டான்.
ஒரு சமயம் அவன் நிழலையே அவன் பார்த்துக் கொண்டான். அவனுடைய நிழல் சொல்லிற்று ‘அவன் கதைகள் எழுதிப் புகழ் அடைவான் என்று..’ அவனால் நிழல் சொன்னதை நம்ப முடியவில்லை.
அவர்கள் வீட்டிற்கு அவன் அண்ணன் பெண் வந்திருந்தாள். அவள் நிழலை அவன் பார்த்தபோது அவளுக்குச் சீக்கிரம் திருமணம் ஆகும் அவன் நிழல் சொல்லிற்று.
அதை அவன் சொன்னபோது அவர்கள் நம்பவில்லை. ஆனால் சில மாதங்களில் எதிர்பாராத இடத்தில் அவளுக்குத் திருமணம் நடந்தது.
ராம் குமாருக்குப் பயம் வந்து விட்டது. ‘என்னடா இது நிழல் நம்முடன் பேசுகிறது என்று நினைத்தான். இனிமேல் நிழலைப் பார்த்து ஆராயக் கூடாது என்று நினைத்தான். மேலும் இதைப்பற்றியெல்லாம் யாருடனும் அவன் விவாதிக்கவில்லை.
ஒருமுறை போரூர் சென்று கொண்டிருந்தான். அங்கே ஒரு உயரமான கட்டடத்தின் நிழல் அவனுடன் பேச ஆரம்பித்தது. அவனுக்கு ஆச்சரியம். அது சொல்லிற்று. இன்னும் சில தினங்களில் கட்டடம் கீழே நொறுங்கி விழப் போகிறதென்று. அவன் திகைத்தான். அது அரசாங்கக் கட்டிடம். அங்குப் பணிபுரியும் உயர் அதிகாரிகளுடன் பேசினான். அவர்கள் கிண்டல் செய்தார்கள். ‘உனக்கென்ன பைத்தியமா’ என்று கூட கேட்டார்கள்.
அந்தக் கட்டடத்தின் தலைவிதியை நினைத்து வருந்தினான். திரும்பவும் திரும்பவும் அந்தக் கட்டடத்தின் நிழலைப் பார்த்து வரச் சென்றான்.. அந்த நிழல் கீழே இடிந்து விழப் போவதைப் பற்றியே சொன்னது.
முதலமைச்சரைப் பார்த்துச் சொல்லலாமென்றிருந்தான். அவரைப் பார்க்க முடியவில்லை. அவருக்குக் கீழே உள்ள அதிகாரிகள் பார்த்துச் சொன்னான்.
அவர்கள் அவனைப் பைத்தியக்காரன் என்று அவனைத் துரத்திவிட்டார்கள். அவன் வருத்தப்பட்டான். கண் கலங்கினான்.
பிரஸ்ஸய்க் கூப்பிட்டு இது பற்றிச் சொல்லலாம் என்று நினைத்தான். பிரஸ்ஸிம்ம் நம்பவில்லை.
ஒருநாள் அந்தக் கட்டடம் கீழே விழுந்து நொறுங்கியது.
