எஸ் வி வேணுகோபாலன்

வேண்டாம் வேண்டாம் என்று
பெற்றோர் மறுத்துத்
திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தாலும்
குழந்தைகள் சூழ்ந்த வீட்டைத்
திரும்பத் திரும்பச்
சுற்றி வந்து ஓசையெழுப்பும் பலூன்காரன்
போலவே காதலும்
எதற்கு எதற்கு என்று
அண்ணன் ஒதுக்கி அழைத்து வந்தாலும்
விடாது துரத்தி வந்து
பட்டம் விட வா என்று
வலுக்கட்டாயமாக இழுத்த நண்பனின்
கையில் துடித்த காத்தாடி
போலவே காதலும்
வீட்டு வாசல் வேப்பமரத்து
உச்சிக் கிளையில் சிக்கி
இன்னமும் இருப்பதுபோலவே
நினைப்பில் துடிக்கிறது காத்தாடி
பேராசையில் பெரிதாக
ஊதப்போய் படார் என்று
வெடித்துச் சிதறிய பலூன் துண்டுகள்
ஓரமாய்க் குவிந்திருக்கின்றன மனத்தில்
இடையில் எங்கேனும்
தட்டுப்படக் கூடும்
அந்தப் பொல்லாத காதலும் !

அருமை. நெகிழ வைக்கும் கவிதை
சின்னஞ்சிறு கவிதை சிறகடிக்கும் கவிதை. அருமை
மனசுக்குள் வண்ண வண்ண பலூன் குப்பைகள்…அழகான கறபனை
அருமை…👏👏👌
கட்டையிலிருந்து இழுத்து
கடிகாரமாக்கி கட்டிய
கலர் மிட்டாயை
காண்பதா உண்பதா?
காதல் சங்கடம்…
வண்ணங்கள் காட்டி ஆடும் காற்றாடி யும், பலூனும், காதற் வயப்பட்டு ஆடும் மனித மனமும் காற்றின் திசையறிந்தே ஆட்டம் காட்டும். உவமைகள் கவிதைக்கு அழகு.
இந்த வயதிலும் பலூனும் காத்தாடியும், ஊதியும் வெடித்தும், பறந்தும் சிக்கியும், உங்கள் காதலை உங்கள் நினைவில் கொணர்கிறது என்றால் அது சிறந்த தருணங்களாகத்தான் இருக்க வேண்டும். சபாஷ் கவிதை.
பலூனும் காத்தாடியும் காதலும் அந்தந்த பருவங்களுக்கு மட்டும் உரியவை அல்ல. தேடலும் இழப்பும் மறையாத உணர்வாகிய சிறிய கவிதை. அரிய சித்திரம்!
எளிமையான வரிகளில் நீங்கள் ஒரு சித்திரம் வரைந்து , உள்ளே புதைந்து போன அந்த பொல்லாத காதலை நினைவு படித்தி நெகிழ வைத்து விட்டீர்கள்!!!.