நாகேந்திர பாரதி

அவன் சாப்பாட்டு மேஜை மேல், தட்டில் வைக்கப்பட்டிருந்த கெண்டை மீன் வறுவலைப் பார்த்த அவன் நினைவில் , அவளது மீன் போன்ற கண்களே ஞாபகத்தில் ஓடின . அலுவலகத்தில் அவனுடன் வேலை பார்க்கும் அவள் கண்களை, மீனுடன் ஒப்பிட்டுக் கவிதை எழுதி நாளை அவளிடம் காண்பித்து அந்த மீன் விழிகள் பாராட்டில் விரிவதைப் பார்த்து ரசிக்க வேண்டும் .
‘ என்ன ஞாபகத்திலே இருக்கீங்க , உங்களுக்குப் பிடிக்குமேன்னு மீன் கடைகள்ளே அலைஞ்சு இந்த கெண்டை , கெளுத்தி எல்லாம் வாங்கி வந்து சமைச்சு வச்சா , சாப்பிடாம என்ன யோசனை ‘ என்று கேட்ட மனைவியை ஒரு வெற்றுப் பார்வை பார்த்து விட்டு ஒரு மீன் துண்டை எடுத்து வாயில் போட்டுக் கடித்தான் .
அப்போது ஒரு முள் தொண்டையில் மாட்டிக் கொள்ள , மூச்சு விட சிரமப் பட்ட , அவனைப் பார்த்துத் துடித்துப் போனாள் மனைவி . கண்களில் கண்ணீர் மல்க ‘ இந்த சோற்று உருண்டையை முழுங்குங்க ‘ என்றபடி ஒரு கவளம் சோற்றை உருட்டி அவன் வாயில் இட அதை முழுங்கிக் கொண்டே பார்த்தான் . அவன் மனைவியின் கண்கள் , அவள் கண்கள் போல் , மீன் போல் விரிந்து இல்லை என்றாலும், இதில் வடிந்த கண்ணீர் .
அந்த சோற்று உருண்டையோடு சேர்ந்து தொண்டை விட்டு இறங்கி மறைந்தது மீன் முள் மட்டுமா .
