ஆர் வத்ஸலா

அலுவலகத்தில் வேறொரு பிரிவுக்கு மாற்றல் உத்தரவு வந்தவுடன் என்னைத் துக்கமும் கோபமும் ஒருங்கே தாக்கின. போயும் போயும் அந்த மேலதிகாரியின் கீழா நான் வேலை செய்ய வேண்டும்! மனைவி கேட்டாள். “ஏன்?””எனக்கு பிடிக்கல” என்றேன். இன்று புதுப் பிரிவில் முதல்நாள். கடுப்புடன் சென்றேன். அவர் என்னைத் தொந்தரவு செய்யவில்லை. (செய்திருந்தால் நான் ஏறி இருக்க மாட்டேன்?) இன்று கணக்கில் ஏதோ சிறிய தவறு. உடனே அதைச் சுட்டிக்காட்டி,
“இனி கொஞ்சம் கவனமாக இருங்கள்” என்றார்.
உள்ளுக்குள் கொதித்தேன்.’என்ன பெரிய்ய தவறு? எ இவர் என்ன ஐன்ஸ்டீனின் மறு அவதாரமா?’ வீட்டிற்குப் போய் எகிறினேன்.
“இது என்ன காபியா, கஷாயமா? இத்தெ கலக்க எம்.எஸ்சி. ஹோம் சயின்ஸ் பட்டம் ஒரு கேடா?”
மனைவியின் பதில்
‘வர்க் டு ரூல்’ ரூபத்தில் வர என் சமாதான கைகுலுக்கலின் வழக்கமான படிகள்.
முதல் படி – பணவிரயம் –
(வீரியமற்றது எனப் பலமுறை அனுபவப் பட்டிருந்தாலும் சுலபம் என்பதால் ஏதோ ஒரு நப்பாசையில் எப்பொழுதும் தொடக்கப்படி)
அடுத்தபடியாக (அவீரத்தின் சிகரமான, மனைவிக்குப் பயப்படும் கணவன்மாரைப் பற்றின அரைத்துப் புளித்துப் போன அசட்டு நகைச்சுவை துணுக்குகள் – (மனைவியின் உணர்ச்சி துறந்த பார்வையின் முன் அவை பொடிப் பொடியாகி விழுந்து, ஏற்கனவே முகத்திலிருந்து வழிந்த அசடு கீழே உண்டாக்கி இருக்கும் குளத்தில் கலந்து சாக்கடையாகுமென எனது தீர்க்கதரிசி மனம் எச்சரித்திருந்தாலும் ).
கடைசி படி – மன்னிப்பு கோரல் (உளவியல் ரீதியாக என்னைப் பயங்கர பாதிப்புக்குள்ளாக்கும், ஆனால் நிச்சயமாக நல்ல முடிவைத் தரும் ஒரே வழி) பழையபடி முதல் டிகாக்ஷனில் புதிதாகக் காய்ச்சிய பாலில் ஆடை படிவதற்கு முன் கலந்த காபி ‘ஹிந்து’ பேப்பருடன் அருளப்பட்டது.இத்தனை வீட்டுப் பிரச்சினைகளும் இந்த புது மேலதிகாரியால் வந்த வினை என உள்ளே மனமெரிந்தாலும் புது பல் செட் செலவுக்குப் பயந்து பற்களை ‘நற நற’வென கடிக்க முடியவில்லை.
இன்று என் கடன் மனுவை உடனுக்குடனே ஏற்றுக்கொண்டு விட்டார், நேற்று நடந்ததற்கு பரிகாரமாக. நான் முறைத்துக் கொண்டு விட்டால் என்ன செய்வது என்று பயந்திருப்பார் போல.
இதோ என்னை நோக்கி வருகிறார். நடையைப் பாருங்கள், ராணுவ குதிரை மாதிரி!முகத்தில் புன்னகையோடு (வெள்ளைக் கொடி போலும்!)
“எக்ஸ்ட்டர்னல் ஆடிட்டரெ பாத்துட்டு வர்றேன். அதுக்குள்ள இந்த ஃபைலை தயார் செஞ்சுடுங்க.” என்றார். எழுந்து நின்று பணிவுடன் கூறினேன் “எஸ், மேடம்.”
நரைத்த ‘பாய் கட்’ முடியும் சூட்டும் ஷுவுமாய் ‘டக் டக்’ என நடந்து போகிறாள் – கோடாலி முடிச்சும் மடிசாருமாய் கணவனருகில் நின்று மாமனார் திவசம் செய்ய வேண்டிய கிழவி.
