சிட்டுக்குருவி/க நா சு

ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து
தன் தலைக்குமேலே இருக்கும் விசிறியை
ஆட்டிப் பார்க்கிறது – சீப் சீப் என்று
கத்துகிறது அதைத் தூக்கிக் கொண்டு போய்த்
தன் கூட்டில் சுவராக வைக்க முடியுமா
என்று பார்க்கிறது. முடியவில்லை. விசிறி
நகருகிறதே தவிர அதன் சிறிய மூக்கில்
வரமறுக்கிறது. அசையாது உட்கார்ந்து
படித்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கும்
என் தலைமயிரைக் கொத்தி இழுக்கப்
பார்க்கிறது – ஊ ஏதும் வரவில்லை.
மேஜை மேல் கிழிந்து கிடக்கும்
சிகரெட் தாள் கிழிசலைத் திருட்டுத்தனமாகத்
தூக்கிக் கொண்டு பறக்கிறது.
மீண்டும் இரண்டு நிமிஷம் கழித்து வந்து
விசிறியை ஆட்டிப் பார்க்கிறது.
சீப் சீப் என்று கூவிக்கொண்டே
மூலையிலிருக்கும் விளக்குமாற்றிலிருந்து
ஒரு குச்சியை லாகவமாக எடுத்துப் போகிறது.
ஒவ்வொரு தடவையும் விசிறியை ஆட்டிப் பார்த்துவிட்டு
ஒரு கடலைத்தொலி, ஒரு காகிதத் துண்டு
ஒரு ஜிகினாத்தாள், ஒரு கடலைத் தொலி
இவற்றை எடுத்துப் போகிறது.

கவிதை எழுத உட்கார்ந்த நான்
எனக்கும் அந்த சிட்டுக் குருவிக்கும்
என்ன வித்தியாசம் என்று எண்ணிப் பார்க்கிறேன்.