
ஏறுவதற்கு மட்டுமல்ல
இறங்குவதற்கும் கூட
தேவை படிக்கட்டுகள்!
அந்த
வேடிக்கை மனிதர்கள்
மிகவும் உற்சாகமுடன்
பரவசமாய்
மேலிருந்து கீழே
கீழிருந்து மேலே
நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்
அந்த சுறுசுறுப்பான
நகரும் படிக்கட்டுகளில்!
வேடிக்கை மனிதர்களை
வேடிக்கை பார்த்தபடி
கடத்தும் நொடிகளில்
என் காலுக்கடியில்
ஓர் அரவம் போல் ஊர்கிறது
ஒரு தயக்கம் !
ஒரு அச்சம்!
அது விரிக்கிறது ஒரு தடை
சுழன்றுவரும் படிகளில்
கால் வைக்க!
என்னுள் அழகாய்
படமெடுத்தாடுகிற
அரவத்திடம்
தினம் தினம்
நான் நடத்தும்
உரையடல்
நீண்ட வண்ணமிருக்க
எவரையும் பொருட்படுத்தாமல்
நகர்ந்து கொண்டிருக்கின்றன
படிக்கட்டுகள்!
08-12-2022
***
