
மொழிபெயர்ப்பாளர் முதல்தர இலக்கியவாதி அல்ல என்றும்
மொழிபெயர்ப்பு குறித்த உதாசீனமும் தமிழிலக்கிய வாசிப்புச் சூழலில் இருந்ததாக உணர்ந்துள்ளீர்களா? தங்களின் அரை நூற்றாண்டுக் கால அனுபவத்தில் அது மாறிக்கொண்டு வருகிறதா?
உங்களின் இந்தக் கேள்வி மிகவும் சரியானது. நான் மொழியாக்கம் செய்ய வந்த தருணத்திலும், ஓரளவு தமிழ் வாசகர்களுக்கிடையே அறிமுகம் ஆன பின்பும் கூட தமிழிலக்கிய வாசகப் பரப்பில் மொழி பெயர்ப்பாளனாக நான் உதாசீனப்படுத்தப்பட்டிருக்கிறேன். மொழி பெயர்ப்பாளர்களுக்கென சாகித்திய அகாதெமி விருது வழங்கத் தொடங்கிய பின்தான் அவர்களுக்கு சிறிய அளவிலாவது மரியாதை கிடைக்கத் தொடங்கியது.
ஏன், எனக்கு முன்னால் மொழியாக்கத்தில் சிறந்து விளங்கிய
அ.கி. ஜெயராமன்,
த.நா. சேனாதிபதி,
த.நா. குமாரசாமி,
சௌரி, ரா. வீழிநாதன், கிருஷ்ணையா,
ந. தர்மராஜன் போன்ற மிகப் பெரும் மொழிபெயர்ப்பு ஜாம்பவான்களுக்கே தமிழிலக்கிய உலகில் சரியான அங்கீகாரம் கிடைக்க வில்லை. கா.ஸ்ரீ.ஸ்ரீ அவர்களுக்கு மட்டும்தான் கொஞ்சம் மரியாதை இருந்தது.
இன்னும் சொல்லப் போனால் அக்காலத்தில் ஒரு நூலை மொழிபெயர்த்த மொழிப்பெயர்ப்பாளரின் பெயரைக்கூட அட்டையில் போட மாட்டார்கள். மூல ஆசிரியரின் பெயரை மட்டும்தான் போடுவார்கள். உள்ளே முதல் பக்கத்தில்தான் மொழிபெயர்ப்பாளர் பெயர் இருக்கும். மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை என்றால் உலக இலக்கியங்கள் எவ்வாறு தமிழுக்கு வந்திருக்க முடியும்? அதனால் இப்படிப்பட்ட மொழிபெயர்ப்பாளர்களை இலக்கியவாதிகள் என்று சொல்லாமல் எப்படி அழைப்பது?
இவற்றையெல்லாம் உணர்ந்துவிட்டுதான் ‘திசைஎட்டும்’ மொழியாக்க இதழை தொடங்கியபின் மொழிபெயர்ப்பாளர்களை கௌரவிக்கும் வகையில் பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் அவர்களின் பொருளாதார உதவியுடன் ‘நல்லி – திசை எட்டும்’ மொழியாக்க விருது வழங்கத் தொடங்கப்பட்டது. அதன் மூலம் இதுநாள் வரையில் மொழியாக்க நூல் சார்ந்து 146 மொழிபெயர்ப்பாளர்கள் பரிசுத்தொகையுடன் கௌரவிக்கப்பட்டுள்ளார்கள். வயதான மொழிபெயர்ப்பாளர்கள் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றுள்ளார்கள்.
2003-ம் ஆண்டுக்குப் பிறகு நான் திசைஎட்டும் இதழ் ஆரம்பித்தபின் இந்நிலை தமிழகச் சூழலில் மாறி வருகிறது. தற்போது பல பதிப்பகங்கள் மொழியாக்க நூல்களை வெளியிடுகின்றன. பல சிற்றிதழ்கள் மொழியாக்கங்களுக்கு தாராளமாக இடம் வழங்குகின்றன. மொழி பெயர்ப்பாளர்களுக்கு விருதுகள் வழங்குகின்றனர். ஏன், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையினர் ஆண்டு தோறும் 10 மொழிப்பெயர்ப்பாளர்களுக்கு தலா ரூபாய் ஒரு லட்சம் வீதம் பரிசு வழங்கி கௌரவிக்கிறார்கள்.
பிற மொழிகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது தமிழிலுள்ள ஜனரஞ்சக இதழ்கள்தான் மொழியாக்கங்களை இன்னும் வெளியிடுவதில்லை. ஜனரஞ்சக இதழ்களில் ஆனந்தவிகடன் மட்டும் தங்கள் ஆண்டுவிழாவில் மொழிபெயர்ப்புக்கு விருது வழங்குகிறார்கள். இருந்தும் அவ்விதழில் மொழியாக்கப் படைப்புகளை வெளியிடவில்லை என்பது குறையே.
ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது தற்போதைய சூழலில் சிற்றிதழ்கள் மொழியாக்கப் படைப்புகளை வெளியிட்டு மொழிபெயர்ப்பாளர்களை இலக்கிய வாதிகளாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இந்த நிலை ஜனரஞ்சக இதழ்களிலும் வந்தால் தமிழ் மொழியாக்க உலகம் இன்னும் சிறப்படைவதுடன் பல உலக இலக்கியங்களை தமிழுடன் ஒப்பிட்டு நோக்க உதவியதாகவும் இருக்கும்.
முகநூலில் : ஆர்.கந்தசாமி
நன்றி: சிவானந்தம் நீலகண்டன்
