கருமேகக் கருணை/
நாகேந்திர பாரதி

வாசல் திண்ணை
வெயில் நேரத் தூக்கத்திற்கும்
இரவு நேரப் புரணிக்கும்
ஏற்ற மேடை

ஓரமாய் நிற்கும்
வேப்ப மரத்தடியில்
எப்போதும் ஒரு நாய்
ஏக்கத்தோடு பார்க்கும்

கூரையும் ஓடுமான வீட்டுக்குள்
நுழைந்து திரும்பினால்
சட்டி பானைகளுக்கு நடுவில்
சாணி மெழுகிய தரை

ஓரமாய் நிறுத்தி வைத்திருக்கும்
ஈஸி சேரை இழுத்துப் போட்டு
கட்டையைச் சொருகிச் சாய்ந்தால்
காலிடுக்கில் இடிக்கும்

சுவரைப் பிளந்த
களிமண் ஜன்னலின் வழியே
வயலும் பனைமரமும்
ஓவியமாய்த் தெரியும்

காலை நேரப் பழைய சோறும்
மாலை நேர மீன்குழம்பும்
இடையில் வயக்காட்டு வேலையுமாய்
கிராமம் ஒரு சொர்க்கம் தான்
கருமேகம் கருணை செய்தால்

கிராமம் ஒரு சொர்க்கம் தான்
கருமேகம் கருணை செய்தால்