தலைப்பு/மதுவந்தி

பாதிப்பேர்
தலைப்பு தந்தவுடன்
பேசிவிடலாம்.
கட்டுரை எழுதிவிடலாம்.
கதையும் சாத்தியம்.
ஆனால்,
தலைப்பு கொடுத்த
உடன் கவிதை???

சங்கத் தலைவர்
அறிவிப்பு கேட்டு
அதிகமாச்சு கவலை.
கடந்த நிகழ்வுகளின்
அனுபவம் இன்னும்
ஏற்றியது அழுத்தத்தை.

“மலர்ந்தும் மலராத பாதி மலர்.”
“ராத்திரிகளில் ஓடிவிடும் சாத்திரங்கள்.”
“காலை எழுந்தபின் நாளைய கேள்வி.”
இதுபோலத் தலைப்புகளில்
கவிதை எழுதச் சொன்னவர்.
அப்போதெல்லாம், காலமிருந்தது
கவிதை யோசிக்க.

வரமறுக்கிற குழந்தையை
தரதரவென இழுத்துச் சென்று
பள்ளியில் சேர்க்கிற மாதிரி
சொற்களை இழுத்துக் கோர்த்து
கவிதையென வாசித்ததுண்டு.
உடனே கவிதையெனில்
மலைப்பு, திகைப்பு.

அன்று,மெய் நிகர் நிகழ்வு
ஆரம்பித்தபின்,
வழக்கத்தை விடப்
பாதிப் பேர்தான் வருகை.
வந்தவரும், எப்போ , எந்தத் தலைப்பு
சொல்வாரோவென
பயமும் தயக்கமுமாய்.
“இத்துடன் இந்த நிகழ்வு நிறைவு” எனச்
சொன்னவுடன்,
கரவொலிக் குறியீடுகளால்
நிரம்பியது கணினித் திரை.