பூபாளம்/மதியழகன்

இந்த கீதம்
எங்கிருந்து வருகிறது
அப்பாலுக்கு அப்பால்
எங்கே இருக்கிறார் கடவுள்
பிரார்த்தனை விண்ணப்பங்கள்
அவருடைய அறையில்
குவிந்து கிடக்கின்றன
பூலோக வாசிகளுக்கு
அவருடைய முகவரி
எப்படித் தெரிந்தது
கடவுளர் பூமி
நிம்மதியற்ற நாட்களைக்
கடந்து கொண்டிருக்கிறது
கடவுள் தொலைந்து
போனவர் தானா
ஆதாமின் பாபகாரியத்துக்கு
மன்னிப்பே கிடையாதா
எல்லை கொண்ட மனம்
இறைவனைத் தேடுகிறது
கொடுமையான காலங்களைப்
பூமி தன்னிச்சையாகத்தான்
எதிர்கொள்ள வேண்டுமா
உலகமெனும் பைத்தியக்கார விடுதியில்
எங்கே உறங்கிக் கொண்டிருக்கிறார்
கடவுள்
புனிதமற்ற பூமியில்
நடமாடிக் கொண்டிருப்பவரை
எப்படி கடவுளாகக்
கருத முடியும்
அமைதியற்ற மனம்
எதை நினைத்து ஆறுதலடையும்
பூமிக்கு அப்பாற்பட்ட காரியங்களைக்
கண் காண விழைகிறது
காது கேட்க விழைகிறது
அதலபாதாளத்தில் விழுந்து
கொண்டிருக்கிறேன்
எந்த பிடியும்
கைகளுக்கு அகப்படவில்லை
என் கபாலம்
பாறையில் மோதிச் சிதறும்
பேரோசை கடவுளுக்குக் கேட்கட்டும்
கருணையற்ற அவரது மனம்
எனக்காக ஒரு துளி
கண்ணீர் சிந்தட்டும்.