நடைபயிற்சியும் புகைப்படங்களும்/ஆர்.கந்தசாமி

1) ஒரு பெண்மணி

“என்ன படம் புடிக்கிறீங்களா?”

“ஆமாம்”

“எதுக்கு?”

“வயல்கள் அழகாய் இருக்குது இல்லே”

“எடுத்து?”

“எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியதுதான்”

“அப்படியா! சரி, சரி”

2)ஒரு பெரியவரிடம்

“பெரியவரே இந்த ரோடு எங்கே போகுது?”

“இது வீரப்பம்பாளையம் போகுது”

“எளையாம்பாளையம் போகுமா?”

“அப்படியே தார்ரோட்டிலே போனால் அங்கு போகலாம்”

பின்னர் அவர்

“நீங்கள் எங்கிருந்து வர்ரீங்க?”

“பள்ளிபாளையத்தில் இருந்து வருகிறேன்”

“என்ன சோலியா வந்திருக்கீங்க?”

“சும்மா அப்படியே நடந்து தோட்டங்களை பார்க்கிறதுக்கு”

“நடக்கறீங்களா?” சரி, சரி.

3)ஒரு வீட்டின் முன்புறம் ரோஜாச் செடியைப் புகைப்படம் எடுக்கும் போது அந்த வீட்டின் வயதான அம்மா

“ஏங்க, என்ன செய்யறீங்க?”

“ரோஜாப்பூக்கள் அழகாக இருக்குது. அதைப் போட்டே எடுக்கிறேன்”

“ஏங்க, வேணுமினா இரண்டு, மூணு பூ பறிச்சிட்டு போங்க”

“இல்லைங்க, போட்டோ மட்டும் எடுத்துக்கிறேன்”

“அதனாலென்ன பூவும் பறிச்சுட்டுப் போங்க”

“இல்லையம்மா. வேண்டாம் என்று சொல்லி விடைபெற்றேன்”

4)ஒரு நாய் பின்னாடி குரைத்துக் கொண்டே வந்ததால் கையில் அதை மிரட்ட ஒரு கல்லை வைத்துக் கொண்டு நடந்தேன். அதைப் பார்த்த ஒருவர்

“என்னங்க கையில கல்லை வைச்சுக்கிட்டு நடக்கிறீங்க?”

“ஒருநாய் விடாமல் பின்னால் குரைத்துக் கொண்டே வருகிறது. கடித்து விட்டால் என்ன செய்வது? அதனால் கையில் கல்லை வைத்துள்ளேன்”

“அதை கல்லில் ஒரு இருத்து இருத்துங்க ஓடிப் போய் விடும்”

“இல்லீங்க அதைச் சும்மா மிரட்டுவதற்கு வைத்துள்ளேன்”

“சரி, போங்க, போங்க”

5)ஒருவரிடம் நான்

“ஏங்க, அங்கு இரண்டாக ரோடு பிரிகிறது. எந்தப் பக்கம் போனால் மெயின் ரோட்டிற்குப் போகலாம்”

“வலதுகைப் பக்கமாப் போங்க”

நான் அவர் சொன்னபடி வலது கைப்பக்கம் நடக்க ஆரம்பித்தேன். பின்னாடி இருந்து ஒரு சத்தம். திரும்பிப் பார்த்தேன். அவர் கையை ஆட்டி எனக்கு இடது கைப்பக்கம் போகச் சொன்னார். அவர் சொன்னபடி மாற்றி நடந்தேன். வலது, இடது தெரியாமல் சொல்லி விட்டார் முதலில்.

6) ஒருவரிடம் நான்

“ஏங்க சின்னார்பாளையம் வாய்க்கால் போக எவ்வளவு தூரம் இங்கிருந்து?”

“ஒரு கி.மீ.போகனும்”

நடக்க ஆரம்பித்தேன். ஒரு கி.மீ. தாண்டி ஒரு பேக்கரியில் தேநீர் அருந்திக் கொண்டு ஒருவரிடம் கேட்டேன்.

“ஏங்க இந்த சின்னார்பாளையம் வாய்க்கால் இங்கிருந்து எவ்வளவு தூரம் போகனும்?”

“ஓ! பெரிய வாய்க்காலை கேக்கறீங்களா? அது இன்னும் ஒன்னரை கி.மீ. போகனும்”

சரியென்று நடக்க ஆரம்பித்தேன். ஒன்னரை கி.மீ. ஆகியிருக்கலாம். என்று நினைத்து அங்கு இருந்த ஒருவரிடம்

“ஏங்க இந்த சின்னார்பாளையம் வாய்க்கால் இன்னும் எவ்வளவு தூரம்?”

“நீங்க எங்கிருந்து வர்ரீங்க?”

நான் டீ குடித்த பேக்கரி பெயரைச் சொல்லி, அங்கிருந்து ஒன்னரை கி.மீ. என்று ஒருவர் சொன்னார் என்றேன்.

அவர் “நீங்கள் பேக்கரியில் இருந்து நடந்த தூரம் இன்னும் நடக்கனும்” என்றார்.

அன்று திரும்பி விட்டேன். ஆனால் அடுத்த சில நாட்களில் வாய்க்காலைச் சென்று பார்த்தேன்.

7) எங்கள் வீட்டில் இருந்து நடந்து ‘சமயசங்கிலி’ என்ற கிராமத்தை அடைந்தேன். இரண்டரை கி.மீ.தூரம். வழியில் ஆற்றைப் பார்க்க இரண்டு இடங்கள் சென்றதால் 3 கி.மீ. ஆகியிருக்கும். அங்கிருந்த ஒருவரிடம்

“ஏங்க பேரேஜ் போகனும், எவ்வளவு தூரம்?”

“அது ரொம்ப தூரங்க? நீங்க எங்கு போகனும்?”

நான் எங்கள் வீட்டு ஏரியாவைச் சொன்னேன். அவர் உடனே நான் வந்த வழியைச் சொல்லி அதில் போங்கள் என்றார்.

“இல்லீங்க பேரேஜ் பார்க்கனும்”

“அப்படியா? இந்த ரோட்டில் 2கி.மீ. போனால் அங்கிருந்து பிரியும் ரோட்டில் 1கி.மீ. உள்ளே போகனும்” என்றார்.

டீ வேறு குடிக்கவில்லை. நடக்க முடியுமா? என்று எண்ணியபடியே நடந்தேன். நல்ல வேளை வழியில் சிறிது தூரம் நடந்ததும் ஒரு டீக்கடை இருந்தது. டிரம்மில் டீ போட்டு வைத்திருந்தார்கள். ஒரு
டீயைக் குடித்தவுடன் மனதில் தைரியம் வந்தது. நடக்க ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட இரண்டு கி.மீ. இருக்கலாம். அங்கிருந்த ஒருவரிடம் கேட்டேன்.

“ஏங்க பேரேஜ் போக இன்னும் எவ்வளவு தூரம்?”

இன்னும் 1கி.மீ.சென்று இடது பக்க தார்ரோட்டில் இரண்டு கி.மீ. போக வேண்டும் என்றார். தலை கொஞ்சம் சுற்றியது. ஒருவழியாக நடந்து பேரேஜை அடைந்தேன். சிறிது நேரம் பார்த்து விட்டு திரும்ப நடக்க ஆரம்பித்தேன். 2 கி.மீ. வந்தபாதையில் திரும்ப நடந்து, வந்த சாலையைப் பிடித்தேன். பின்னர் அதே சாலையில் தொடர்ந்து குமாரபாளையம் சாலையைப் பிடிக்க நடந்தேன். அங்கிருந்து 2கி.மீ. நடந்து மெயின் ரோட்டை அடைந்தேன். டீக்கடையோ, இளநீர்க் கடையோ எதுவும் அருகில் இல்லை. பள்ளிபாளையம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அங்கிருந்து மூன்று கி.மீ. நடந்து வந்ததும் ஒரு பேக்கரியில் இரண்டு மசால் வடையுடன் ஒரு டீ. கொஞ்சம் தெம்பாக இருந்தது. மீண்டும் நடக்க ஆரம்பித்து வீட்டிற்கு வர இன்னும் 2 கி.மீ.

ஆக காலை 6மணிக்கு தொடங்கிய நடைபயிற்சி ஒன்பதே கால்மணிக்கு அன்று நிறைவுற்றது. இடை இடையே புகைப்படங்கள்.

இப்படிப் பல அனுபவங்கள் கடந்த ஓரிரு மாதங்களில். ஆனால் பள்ளிபாளையத்தைச் சுற்றி இருக்கும் கிராமங்கள், சாலைகள், ஊர்ப்பெயர்கள் எல்லாம் இப்போது அத்துபடி. பள்ளிபாளைத்தைச் சொந்த ஊராகக் கொண்ட பலருக்கு நான் நடந்து சென்ற பாதைகளைச் சொன்னால் அவர்களுக்கே தெரியாது இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.