நேற்று உலககோப்பை/வாசு தேவன்

நேற்று உலககோப்பையை கத்தார் ஷேக் மெஸ்ஸிக்கு வழங்குவதற்கு முன், அவருக்கு மெல்லிய கருப்பு சட்டையை போர்த்துவார். இதன் மகத்துவம் தெரியாமல் அர்ஜெண்டைனா ஊடகங்கள் ‘ மெஸ்ஸி அணிந்திருக்கும் நாட்டு கொடி சட்டையை கருப்பு கொண்டு மறைத்தார்’ என கண்டனங்களை பதிவு செய்தார்கள். கருப்பு நிறம் மேற்கிலும், இந்தியாவிலும் துக்கத்தின் குறியீடாக பார்க்கப்படுகிறது. (அரசியல் கருப்பு வேறு). இஸ்லாமிலும், அரபு நாடுகளிலும் கருப்பு புனிதமானது. அந்த கருப்பு சால்வையின் பெயர் பிஷ்ட். அரபுலகில் போரில் வெற்றிபெற்ற மாவீரர்களுக்கு அரசன் வழங்கும் மிகப்பெரிய கவுரம். நோபல் பரிசுக்கும் மேலானது. சுல்தான் குடும்பங்களில் மரியாதைக்குரியர், மூத்தவர்களுக்கும் இது வழங்கப்படும். மிக கம்பீரத்துடன் அழகாக கத்தார் சுல்தான் மெஸ்ஸியை கவுரப்படுத்தியுள்ளார்.

இதற்கிடையில் கூகுள் சுந்தர் பிச்சை டிவிட்டரில் ” வரலாற்றில் இணைய சேவை முடங்கும் என பயந்தேன். அந்தளவுக்கு Highest ever traffic என்றும் உலகம் முழுவதும் நேற்றிரவு பார்த்த ஒரே நிகழ்ச்சி இதுதான்’ என்கிறார்.

நேற்று முதல் பாதியில் உலகம் முழுவதும் அனைத்து ஊடகங்களும் தலைப்பைச் செய்தியை முடிவு செய்துவிட்டன. 90 நிமிட ஆட்டம் முடிய இன்னும் 11 நிமிடங்கள்தான். அர்ஜெண்டைனா 2 கோல் முன்னிலையில் வெற்றி பெற தயாராகிவிட்டது. 79 வது நிமிடம் எம்பாப்பே ஒரு கோல் போட்டார். 81வது நிமிடம் அடுத்த கோலையும் போட்டு சமன் செய்தார். மூன்று நிமிடத்தில் ஆட்டத்தின் போக்கையே மாற்றி உலகையே தன் பக்கம் திருப்பினார். Extra Time 30 நிமிடங்கள். 90+30=120 நிமிடங்கள். 109 வது நிமிடத்தில் மெஸ்ஸி அடித்து அர்ஜெண்டைனா 3 கோல் முன்ணனி. ஆட்டம் முடிய 11 நிமிடங்கள்தான். ஆட்டம் முடிய இரண்டு நிமிடங்களுக்கு முன் 118 நிமிடம் எம்பாப்பே அடித்து சமன் செய்தார். ஒரு சில நிமிடங்களில் எல்லாமே மாறிவிட்டது. ஃபிரான்சின் விடாமுயற்சி, போர்க்குணம்,நம்பிக்கை மூன்றும் வாழ்க்கைக்கும் பொருந்தும். பெனால்ட்டியில் கோட்டை விட்டார்கள். உண்மையில் நேற்று இரு அணிகளும் அமர்களமாக ஆடினாலும் ஃபிரான்சின் மனந்தளராத போக்கும், தன்னம்பிக்கையும் பிரமிக்க வைக்கிறது. எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காத இறுதிப்போட்டி!

அர்ஜெண்டைனாவில் இப்போது காலை 11 மணி. ஒருவரும் வேலைக்கு செல்லவில்லை. மக்கள் பூங்காவிலும், சாலையும் குடித்து கும்மாளமடிக்கிறார்கள். பல ஓட்டல்களில் இலவச உணவு, மது. சாராயாம் ஆறாக ஓடுகிறது. மரடோனா புகைப்படத்தை ஏந்தி உற்சாகமாக பாடுகிறார்கள். ஒரு ஆட்டம் உலகத்தையே அசைக்கிறது. கோப தாபங்களை, வெறுப்பையும் ஒதுக்குகிறது. அன்பையும் பிரியத்தையும் மனிதர்களிடையே வளர்க்கிறது.

அர்ஜெண்டைனாவில் வீரர்களை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள். புகைப்படத்தில் தங்களுக்குள் முத்தங்களை பரிமாறிக்கொண்டும், மெஸ்ஸியை முத்தமிட்டு வரவேற்கும் காதலர்கள்..