
நேசித்தான் தேசத்தை
இமயமுதல் குமரி வரை
சுவாசித்தான் தாய்நாட்டின்
விடுதலையை வேட்கையுடன்
யாசித்தான் சக்தியிடம்
காணநிலம் பத்தினிப்பெண்
யோசித்தான் பெண்ணுரிமை
பாஞ்சாலி சபதத்தில்
வீசித்தான் எறிகவென்றான்
வெறும்மூடப் பழக்கங்கள்
ஆசையாய் அறிவுரையாய்
பாப்பா பாட்டுரைத்தான்
ஆசிதந்தான் காந்திக்கு
வாழ்கநீ எம்மானென்று
வாசித்த கீதையினை
வளமாக மொழிபெயர்த்தான்
தேசியம் அதனோடு
தெய்வீகம் பரிந்துரைத்தான்
காசினியில் கண்டதுண்டோ
பாரதிபோல் ஒருகவியை
பேசியும் எழுதியும்
ஆண்டுக்கு ஒருமுறைதான்
மீசைக்கவி பாரதியின்
மேன்மைமிகு கவிதைகளை
பூசித்துப் பயனில்லை
புகழுரையால் ஆவதென்ன
வாசித்து அவன்கவியின்
உட்பொருளை உள்ளுணர்வை
யோசித்துப் பகிர்ந்து
வாழ்வாம்.
