
Awakening என்கிற சொல்லின் மீது பெரும் விருப்பம் உண்டு. இந்த சொல் ஒரு மனிதனின் அனைத்து துன்பங்களையும் கழுவித் துடைத்துவிடும் சொல்லாக இருக்கிறது. சமீபத்தில் இதை உணர்ந்தேன்.
உண்மையில் என் எல்லா பயங்களையும், துன்பங்களையும் நீரூற்றிக் கழுவி விட்டேனா என்பது தெரியவில்லை. ஆனால் அதைப் போன்ற ஒன்று சாத்தியமாகி இருக்கிறது.
ஒரு குளிரடங்கிய காலையில், நேரத்தில் எழுந்து ஜேகே எனும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் உரைகள் தொகுக்கப்பட்ட “பயத்திலிருந்து விடுதலை”எனும் நூலிலிருந்து நம்பிக்கை எனும் அத்தியாயத்தை வாசித்துத் திகைத்தேன்.
இயல்பு மனம் உருவாக்கிய வாட்! என்கிற கேள்வியால் குழம்பி மீண்டும் அதே அத்தியாயத்தை வாசித்து அவர் சொன்னதை முழுமையாக அறிந்தபோது, ஓர் அகலச் சிரிப்பு இதழில் வந்து அமர்ந்து கொண்டது.
தொடர்ந்து ஜேகே வை வாசிக்க வாசிக்க
மனம் தன் சின்னஞ்சிறிய கூட்டிலிருந்து விடுபட்டுக் கொண்டதைப் போன்றதொரு உணர்வு தோன்றியது. நான் என் பாதுகாப்புணர்வின் சன்னல்களை மிக வேகமாகத் திறந்தேன்.
ஜேகே வை என் பதின்மங்களிலிருந்தே அறிவேன். ஓஷோவும் ஜேகேவும் ஒரே சமயத்தில் என் அண்ணனின் வழியாக அறிமுகமானார்கள். நான் ஓஷோவை பிடித்துக் கொண்டு ஜேகேவை புறம் தள்ளினேன். அவர் அவ்வளவு கடினமாக இருந்தார். இயல்பாகவே புனைவுகளில் மூழ்கும் மனம் கொண்ட எனக்கு உண்மைகளை அவ்வளவு நேரடியாக பார்க்கும் துணிவில்லை. எனவே மிக நேரடி உண்மையின் வடிவமான ஜேகே கசந்தார்.
புனைவுகளின் மற்றும் கொண்டாட்டங்களின் நாயகனான ஓஷோவைப் பிடித்துக் கொண்டேன். காலம் ஓடியேவிட்டது. அனுபவமும் பக்குவமும் உண்மையைச் சந்திக்கத் தயாராகும் மன நிலையை உருவாக்கும்போது சூழல் தாமாகவே ஜேகே விடம் என்னைக் கொண்டு வந்து சேர்த்தது. அல்லது இதெல்லாமும் திட்டமிட்ட மனதின் சமிக்ஞைகளோ என்பதும் தெரியவில்லை.
இதைத்தான் ஜேகே வாழ்வு என்கிறார். அதை மட்டுமே முன் நிறுத்துகிறார். அவருக்கு கடவுள் போன்ற கருத்தாக்கங்களில் நம்பிக்கை இல்லை. மிக ஆழமாக தனி மனிதன் என்ன உணருகிறான் என்பதுதான் அவருக்குப் பொருட்டாக இருக்கிறது.
நம்பிக்கை, நல்லது, கெட்டது, உண்மை, பொய், போலி, அசல் என எதுவுமே அல்லது எல்லாமுமே பொய் என்கிறார். தன்னியல்பே ஏறக்குறைய சரி. மற்றவை யாவும் பொருட்படுத்தத் தக்கதில்லை என்பதுதான் அவரின் பார்வை.
பாதுகாப்புணர்வு மற்றும் பேராசை இவை இரண்டும் கூடி உருவாக்குகிற பயம்தான் மனித வாழ்வின் மிகப் பெரிய விரோதி என்கிறார். ஒட்டு மொத்த மனித குலமே இந்த பயத்தை நோக்கித்தான் நகர்கின்றது. அதில்தான் அல்லது பயத்தின் மீதுதான் நம் ஒட்டு மொத்த வாழ்வும் சம்மணமிட்டு அமர்ந்திருக்கிறது.
இந்த பயத்தை வெல்லத்தான் நாம் மிகப் பெரிய அதிகாரங்களை அடையத் துடிக்கிறோம். பணமும் அதிகாரமும் நம்மை பயமற்ற ஒரு வாழ்வை நோக்கி அழைத்துச் செல்லும் என நம்புகிறோம். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறோம். ஒரே வரியில் சொல்லப்போனால் ஊரையே அடித்து உலையில் போடுகிறோம். அதற்கு வெற்றி எனப் பெயர் வைக்கிறோம். How pathetic!
இந்தச் சங்கிலியில் நானும் தப்பவில்லை. என்னைச் சுற்றிலும் அன்பு, குடும்பம், பணம், அதிகாரம், இலக்கியம், நட்புகள், ஏன் சமகால இருத்தல் உட்பட சகலத்தையும் என் மூளையின் அல்லது கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டதின் பலனாகப் பாவித்து பாதுகாப்புணர்வின் அனைத்து சுவர்களையும் எழுப்பிக் கொண்டேன். அதையே லெளகீக வாழ்வின் வெற்றி எனவும் கருதினேன்.
இன்னொரு வகையில் அதிகாரத்தின் காலடியைக் கூட நெருங்க இயலாத என் முதல்தலைமுறை வாழ்வு இந்த ஸோ கால்டு வெற்றிகளை நோக்கித் தள்ளின அல்லது நெருக்கடிகளைத் தந்தன என்றும் கூட வைத்துக் கொள்ளலாம்.
இவர்களின் அல்லது இவைகளின் கூற்றுப்படி நான் அதை அடைந்தேன்.
ஆனால் ஆழ்மனம் இவைகளில் ஒருபோதும் திருப்தியடையவில்லை. ஓர் அகலப் புன்னகை உதட்டில் இத்தனை காலமும் வந்தமரவேயில்லை. நான் வெறுமனே ஜோக்குகளுக்கும், வெற்றிகளுக்கும், சக மனிதர் வழி வந்து சேரும் புறத் தூண்டல் உவகைகளுக்கும் மட்டுமே சிரித்தேன் அல்லது மகிழ்ந்தேன்.
ஒப்பீட்டளவில் என் மகிழ்வுக்கும் பெரிய விலை கொடுக்கவேண்டியிருந்தது. உயிரின் சுபாவம் ஆனந்தம்தானே அதற்கு ஏன் இவ்வளவு போராட்டங்கள் என்கிற கேள்வி என்னை பயமுறுத்தியது. மேலும் அது என் இத்தனை கால அனைத்து அச்சீவ்மெண்ட்களையும் அவமானப்படுத்தியது.
நான் என்பதைத் துறந்த ரமணரையே ஒரு காதாபாத்திரமாக எழுதிப் பார்த்த என் கலை மனமுமே இந்தப் பாதுகாப்புணர்வின் அல்லது நம்பிக்கைகளின் அசுரப் பிடியில்தான் இத்தனை காலம் இருந்தது .
என்ன ஒன்று, எல்லாவித சந்தோஷ அல்லது துக்க தருணங்களிலும் இது நானில்லை என உள்மனம் அரற்றியபடியேதான் இருந்தது. நான் அதை செவிமடுக்கவில்லை. அல்லது வேண்டுமென்றே தவிர்த்தேன். அந்தக் குரலை, விதிர்ப்பை, அலறலை, இனி புறந்தள்ள முடியாது.
நாய் கவ்விக் கொண்டிருக்கும் எலும்புத் துண்டின் கீறல்களில்தான் ரத்தமெனும் ‘ப்ளஷர்’அல்லது ‘ஸோ கால்டு’ மகிழ்ச்சி ததும்புகிறது என்கிற உண்மையை அறியும் கணத்தில் அந்த எலும்புத் துண்டை கீழே போட்டே ஆக வேண்டும்.
அதன் நீட்டிப்பாகத்தான் தற்சமயம்
Awakening என்பதின் சாரத்தை மனம் உணர்ந்திருக்கிறது.
எப்படி ஏனென படிப்படியாக உள் நோக்கிப் பார்த்து எழுதுகிறேன்.
