ஆசாரக் கோவை—9, 10/வளவ. துரையன்

  1. காலையில் கடவுளை வணங்குக
    (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

நாளந்தி கோல்தின்று கண்கழீஇத் தெய்வத்தைத்
தானறியும் ஆற்றால் தொழுதெழுக அல்கந்தி
நின்று தொழுதல் பழி.

பொருள் விளக்கம்:

காலையில் விழித்தவுடன், குச்சியால் பல் துலக்கி, கண் துடைத்து,
குளித்து இறைவனை நின்று தொழுது எழுக, மாலையில் நின்று தொழுவது தவறு,
அமர்ந்து இறைவனை வணங்குக.

  1. நீராட வேண்டிய சமயங்கள்
    (பஃறொடை வெண்பா)

தேவர் வழிபாடு தீக்கனா வாலாமை
உண்டது கான்றல் மயிர்களைதல் ஊண்பொழுது
வைகு துயிலொடு இணைவிழைச்சுக் கீழ்மக்கள்
மெய்யுறல் ஏனை மயலுறல் ஈரைந்தும்
ஐயுறாது ஆடுக நீர்.

பொருள் விளக்கம்:

இறைவனை வணங்கும் முன்னரும், கெட்ட கனவு கண்ட பிறகும்,
தூய்மை குன்றிய காலத்திலும், உண்ட உணவை வாந்தி எடுத்தாலும்,
முடி வெட்டிய பிறகும், உணவு உண்ணும் முன்னர், காலையில் எழுந்த பிறகும்,உடலுறவுக்குப் பிறகும், சுத்தமில்லாதவரை தொட நேர்ந்த பின்னரும், மல ஜலம் கழித்த பிறகும்,
ஆகிய பத்து விடயங்களில் நாம் சந்தேகம் கொள்ளாமல் குளிக்க வேண்டும்.