“கண்ணா”/மீ. விசுவநாதன்

மார்கழிப் பனியே கண்ணா
மழையின் துளியே கண்ணா
நேர்வழிப் பணியே கண்ணா
நிறைந்த மனமே கண்ணா
ஓர்வழி இல்லா தோர்க்கு
உற்ற துணையே கண்ணா
சேர்வழி உன்தாள் என்றால்
சித்த சுகமே கண்ணா

நம்பிய உயிர்கட் கெல்லாம்
நட்பின் வரமே கண்ணா
கொம்பிலே கொண்ட தேனாய்
கூடிக் களிப்பாய் கண்ணா
தெம்புடன் புகழ்ந்தே உன்னை
தெவிட்டாத் தமிழின் மூலம்
தம்பியாம் நானும் பாட
தவமென் செய்தேன் கண்ணா.

நோயிலும் இன்பங் காணும்
நுட்பம் தந்தாய் கண்ணா
ஆயினும் உந்தன் அன்பின்
ஆழ மறியேன் கண்ணா
ஆயனே மூடன் என்னுள்
அறிவுத் தீபம் ஏற்றி
சேயனை சுத்த ஞானச்
செல்வ னாக்கு கண்ணா .

வானிலே கோலம் போடும்
மாயா சக்தி கண்ணா
நானிலே தவிக்கி றேனே
நகத்தால் கிள்ளி வீச
ஏனினும் தயங்கு கின்றாய்
இரண்ய அகந்தை தன்னை !
ஊனிலே உள்ள ஆன்மா
உன்னால் ஒளிரும் கண்ணா.
(19.12.2022 17.07 pm)