
மொட்டை மாடியில்
அம்மா கட்டிய
கொடியில் அவளின்
அரசாங்கம்தான்
நான்கு கடைகள்
ஏறி இறங்கிப்
பார்த்துக் கயிறு
வாங்கிக் கட்டினாள்
குருவியும் காக்கையும் கூட
அம்மா இல்லாத போதும்
பயந்துகொண்டே உட்காரும்
துணியின் சுருக்கங்கள் நீக்கி
அம்மா உலர்த்துவது
பார்க்கவே அழகாக இருக்கும்
அப்படியே மடித்தெடுத்துக்
கீழே வருவாள்
கேட்காமல் துணிகாயப் போட்ட
குடித்தனக்காரர்கள் மீது
கோபப்பாய்ச்சல்தான்
மாலையில் துணிகளை எடுக்குமுன்
கொடியில் அவை பறப்பதை
ஏதோ நாட்டுக்கொடி பறப்பது
போலப் பார்த்து ரசிப்பாள்
அவள் இப்போது
அடுக்ககக் குடியிருப்பில்
மின்விசிறி சுழலவிட்டு
மேல் கூரையின் கீழ்
துணி உலர்த்தும் போது
மௌனமாக அழுகிறாளோ?
