சோர்ஸ்/கணேஷ் ராம்

இருபது வருடங்களுக்கு முன் எங்கள் நாக்பூர் கிளையில் ஒரு சீஃப் மேனேஜர் இருந்தார். நாக்பூர் வாழ் தமிழர். அதே கிளையில் பல வருடங்களாக வேலை பார்க்கும் அதிசய பாக்கியம் கிட்டியவர்.

குமாஸ்தாவாக அங்கேயே பணியாற்றி, பதவி உயர்வில் வேறிடம் சென்றாலும், அத்தாமன்னியின் நாத்தனார் பெண்ணுக்கு சீமந்தத்தில் சிக்கல் என்கிற மாதிரி சட்டென்று கண்கள் குளமாகிற மாதிரி காரணங்கள் கூறி அதே கிளைக்கு திரும்ப வந்தவர், ஒவ்வொரு பதவி உயர்விலும் வெளியே சென்று குறுகிய கால அவகாசங்களில், சீமந்தங்களும் வளைகாப்புகளும் சித்தி பெண் முதல் சின்ன மாமியார் வரை நீண்டு, விடாப்பிடியாக அதே கிளையிலேயே எப்படியோ தொடர்ந்து கொண்டு இருந்தார்.

அந்தக் கிளையின் பால்யம் அகன்ற உள்ளூர் கிளார்க்குகளும் சில கஸ்டமர்களும் தங்களுக்குள் களுக்கென்று நகைத்து, “இவர் பிறந்ததே இந்த பிராஞ்சுல
தான் தெரியுமோ? இவர் அம்மா பாஸ் புத்தகம் நிரப்ப வந்தவாளுக்கு வலிகண்டு, அவகாசம் இல்லாமல், பிராஞ்சுலயே பொசுக்குனு அவதாரம் நிகழ்ந்துடுச்சு” என்கிற மாதிரி மராத்தியில் அலுப்பில்லாமல் தினம் நக்கலடிப்பது வாடிக்கையாகியே பலகாலம் ஆகிவிட்டது.

கிட்டத்தட்ட இருபத்தெட்டு வருடங்கள் ஒரே கிளை.

அதனால் அவருக்கு அதன் சுவர்களில் அடித்திருக்கும் ஆணிகள் கூட அத்துப்படி.

இன்று ஊரெல்லாம் தின்று தீர்க்கும் ஹல்திராம் கம்பெனியின் நேர் பின்னால் ஒரு சதுக்கத்தின் மாடிக்கு குன்றக்குடி கோவில் மாதிரி செங்குத்தாக அரை நாழிகை ஏறினால் கிளையை அடைய முடியும்.‌ ஆனால், அதற்கு வழி(படி)யெங்கும் அழிச்சாட்டியமாக அமர்ந்து இருக்கும் பூக்காரிகளையும் வளையல் காரிகளையும் சாமர்த்தியமாக நெகோஷியேட் பண்ணி மேலே ஏறிப் போக வேண்டும்.

உள்ளே நுழைந்தவுடன் இடது பக்கம் பிருஷ்ட பாகத்தைக் காண்பித்துக் கொண்டு இவர் அமர்ந்து இருக்கும் கேபின்.

இப்படி ஒரு அமைப்பை நான் எங்குமே பார்த்தது இல்லை. உள்ளே நுழைந்தால் கிளை மேலாளரை நேருக்கு நேர் முகத்தைப் பார்ப்பது தானே வழக்கம்?

அவர் திரேதா யுகத்தில் இருந்து அங்கு நீடிப்பதால், தம் கிளைக்கு, அதுவும் முகமறியாத தென்னிந்திய வங்கியின் கிளைக்கு, வியாபாரம் ஒன்றும் சுவாரஸ்யமாக நடக்காது என்பதை அறிந்து தான் இருந்தார். அதனால், அலுப்புத் தட்டாமல் இருக்க வாஸ்துவை உத்தேசித்து அவ்வப்போது இடமாற்றப் பிழைகளை செய்து பார்ப்பது வழக்கம். இப்போது பிருஷ்ட தர்சனம் நமக்கு சித்தித்து இருக்கிறது என்று தோன்றியது.

நாள்பட்ட மியூசியம் போல் இருந்த அந்தக் கிளையை முடிந்த வரை செப்பனிட்டு, CBS செய்யும் பணிக்காக பூனாவில் இருந்து வந்திருந்தேன் நான்.‌ அடுத்த ஐந்தாறு நாட்கள் இந்தக் குப்பையில் மூச்சு முட்டிக் கிடக்க வேண்டும் என்று கவலையாக இருந்தது.

அவரிடம் பேசிக்கொண்டே பேங்கிங் ஹாலுக்குள் நுழைய முயன்ற போது யாரோ மராத்தியில் அலறியதை உதாசீனப்படுத்தியது தவறாகி விட்டது. அது பாங்கிங் ஹால் இல்லை.‌ பாங்கிங் தொட்டி.

சரேலென்று ஆறடி கீழே முற்றம் போல இருந்த பெரிய இடத்தில் வரவு செலவுக் கணக்கு நடைபெறும் இடத்தைத் தவறாகக் கணித்ததில் பொத்தென்று கால்தடுக்கி உள்ளே விழுந்தேன்.

நுழையும் போதே நல்ல சகுனம்.

நல்ல வேளையாக, நான் விழுந்த இடத்தில், ஒரு பெஞ்சு போட்டு நாள்பட்ட குப்பைகளை அடுக்கி இருந்தார்கள். நான் அதில் மெத்தென்று விழுந்து, வழுக்கிக் கீழே ஒரு பலகையில் இருந்த முதுமக்கள் தாழி போலிருந்த ஒரு மண்பாண்டத்தின் மேல் விழுந்து அதை உருட்டி விட்டேன்.

அதனுள் இருந்த தண்ணீரோடு வேறு ஏதோ ஒரு உருவமும் விருட்டென்று வெளியே ஓடினமாதிரி தான் இருந்தது.

நான் மண்பாண்டத்தில் விழுந்த அடுத்த அரை நொடியில் ஏழெட்டு பேர் “ஐயையோ” என்று மராத்தியில் அலறியவாறு ஓடிவந்து, ஹால் நெடுக உருண்டு கொண்டு இருக்கும் அந்தப் பானையைப் பிடித்து, அதன் ஜனஸ்தானத்தில் கொண்டு போய் மறுபடியும் பிரதிஷ்டை செய்தனர்.

என்னை ஒருவரும் கண்டு கொள்ளப் போவதில்லை என்று துல்லியமாகப் புரிந்து போனதில், நானே தட்டுத் தடுமாறி எழுந்து கொண்டேன்.

எங்கள் அலுவலகம் பூனாவில் இருந்தது. அந்த நாளில் இந்த மாதிரி அமைப்புக்கு சர்க்கிள் ஆஃபீஸ் என்று பெயர்.‌ எங்கள் சர்க்கிள் ஹெட் ஒரு மராத்திக் காரர்.

அவருக்கு முன்னால் இருந்த பெங்காலி ஒருவர் மிகவும் சிநேகமாக எல்லோரிடமும் வாத்ஸல்யமாகவும் இருந்தவர். அவர் வங்கி மேனேஜர்களை ரிவ்யூ செய்வதே அவ்வளவு அழகாக இருக்கும். அவரது நகைச்சுவை உணர்வுக்காகவே அவ்வகை மீட்டிங்குகளுக்கு அவர்கள் ஏங்குவார்கள். எங்கள் அலுவலகத்திலும் கூட அதில் பங்கேற்க நான் நீ என்று போட்டி நிலவும்.

நான் கம்ப்யூட்டர் செக்ஷனின் ஏகபோக உரிமையாளன் என்பதில் இந்த மாதிரி மீட்டிங்குகளில் நான் கட்டாயம் உண்டு.

அதன் பேரில் மகாராட்டிரத்தில் பம்பாய் நீங்கலாக‌ ஒட்டுமொத்த மாநிலத்திலும் நீண்டு பரவி இருக்கும் சகல அதிகாரிகளுக்கும், ஏன், கிளார்க்குகளுக்கும் கூட, என் மேல் தனிப் பிரீதி.

காரணம், கம்ப்யூட்டர் அல்லாத எவ்வளவோ விஷயங்களுக்கு நான் அவர்களுக்கு அனுகூலமாக‌ இருப்பதால்.

எங்கள் பெங்கால் தலைவர் நான்கரை வருடங்கள் அரசாண்டு, பிற்பாடு சந்திகருக்கு மாற்றலாகிச் சென்று விட்டார்.

அவரது பிரிவு உபசார‌ நாளில் ஆளாளுக்குக் கண்ணீரும் கம்பலையுமாக வழியனுப்பினர்.

அந்தப் பிரிவு உபசார விழாவில் பேசிய எங்கள் புதிய தலைவர், “தனக்கு இந்த மாதிரி அன்பு காட்டுவதில் நம்பிக்கை கிடையாது என்றும், வேலை நடக்க வேண்டும் என்றால் எல்லோருக்கும் குறைந்த பட்சம் தொந்தரவு இருந்தால்தான் நடக்கும் என்னும் கோட்பாட்டைத் தீவிரமாக நம்புபவன்” என்றும் தெரிவித்தார்.

நான் உள்பட நாலைந்து பேர் விமான நிலையம் சென்ற போது, எங்கள் பெங்காலி தலைவர் “வந்திருப்பவர் பெரிய கொடுங்கோலர். கோபம் வந்தால் பிஸிக்கலாகவே கடிக்கும் வழக்கம் உள்ளவர்.. கோபம் வந்தால் தானே என்று திருப்தி அடைய வேண்டாம்.. அடிக்கடி கோபம் வரும்” என்று எச்சரிக்கை செய்து விட்டுப் போனார்.

அது உண்மையென்று உடனே புரிந்தது. மனித எத்தனத்தில் அவ்வளவு டெசிபல் சத்தத்தில் கூப்பாடு போடுபவர்களை அங்கே யாருமே அதற்கு முன் பார்த்தது இல்லை.

பத்து நிமிஷத்துக்கு ஒருமுறை எங்கள் கட்டிடம் குலுங்கிக் குலுங்கி ஆடி அடங்க ஆரம்பித்தது.

யாரேனும் ஒருவர் உள்ளே சென்று குதறப்பட்டு, குற்றுயிரும் குலையுயிருமாக வெளிப்படுவது வாடிக்கையாகி விட்டது.

எந்த பாகத்தில் கடி விழுந்தது என்று யாரும் யாரிடமும் தெரிவித்துக் கொள்வது இல்லையென்பதால், வெளியில் திரும்பி வருபவருக்கு உள்ளே என்ன நிகழ்ந்திருக்கும் என்ற ஊகத்தில் பந்தயம் வைக்கிற அளவுக்கு காலம் வெகுவாக முன்னேறி இருந்தது.

வாராந்திர ராணி மாதிரி மாதாந்திர ரெவ்யூ மீட்டிங்குகளில், எல்லா மேனேஜர்களுக்கும், சர்க்கிள் அலுவலக சகாக்களுக்கும் இலவச பிரசவ‌ முகாம் நடைபெறும். கர்ப்பம் தரிக்காதவர்களுக்கும் இந்த பிரசவம் நடப்பதும் அவர்கள் விந்தி விந்தி ஆயிரம் மைல் தாண்டி இருக்கிற கிளைகளுக்குப் போய் சேர்வதையும் மராட்டியம் அடுத்த மூன்று வருடங்களுக்குக் கண்டு களித்தது.

நானும் மல்லிக் என்கிற விஜிலென்ஸ் ஆஃபீஸர் இருவர் மட்டுமே இதில் விலக்கு பெற்றவர்கள்.

மல்லிக் அதி புத்திசாலி என்பதாலும், கம்ப்யூட்டர் விஷயத்தில் நான் மோனோபொலி என்பதாலும் எங்கள் இருவருக்கும் இந்த சலுகை.

ஓரிரு முறை என்னிடம் சத்தமாக, “நீ என் கண் முன்னால் உலாத்துவதை நிறுத்திக் கொள்.. ஏதேனும் விபரீதமாக நடந்தால் நான் பொறுப்பில்லை.. என் வாழ்நாளில் நான் ஒரேயொரு மதராஸியையாவது கழுத்தைத் திருகி, கொன்று போட வேண்டும் என்று பிரதிக்ஞை செய்து இருக்கிறேன்” என்று இடிஇடியென்று சிரிப்பார்.

அவரால் ஏஜிஎம்முக்கு மேலாகப் பயணிக்க முடியாமல் போனதற்கு, மைய‌ அலுவலகத்தில், நெடுங்காலமாக நீடித்துக் கொண்டு இருக்கும் மதராஸிகளே காரணம் என்று தீர்மானமாக நம்பினார்.

அவர் கோபம் செல்லாத இடமே இல்லை. ரிவ்யூ மீட்டிங்குகளில் அவர் நரம்பு வெடிக்கக் கத்துவதும், கெட்ட கெட்ட வார்த்தைகளால் பேசுவதும் (இவ்வளவு உதவாக்கரையாக இருக்கிறாய், உன்னால் குழந்தை பெற்றுக் கொண்டு குடும்பம் எப்படி நடத்த முடிகிறது?), நம்மூர் ஆட்கள் போல சங்கோஜப் படாமல், அந்த ஊர் மேனேஜர்கள், நடு ஹாலிலேயே விக்கி விக்கி அழுவதும் மிகவும் புதிய அனுபவமாக இருந்தது.

இத்தனை பேரிலும் நம் நாக்பூர் தமிழர் மட்டுமே எதற்கும் கலங்காமல் மீட்டிங்குகளுக்கு வருவார்.

அவ்வளவு வசவுகளுக்கும், காறித்துப்பல்களுக்கும், அவர் லவலேசமும் கலங்கியதோ கண்ணீர் உகுத்தோ பார்த்ததே இல்லை.

எல்லோருக்கும் இது மிகவும் ஆச்சரியம்.

ஒரு சந்தர்ப்பத்தில் நான் அவரிடம் கேட்டே விட்டேன்.

“இன்று உங்களைத் திட்டியதைப் பார்த்து எனக்கே மதியம் உணவு இறங்கவில்லை.. நீங்கள் எப்படி சார், பிறவி ஞானி மாதிரி, எதுவுமே நடக்காத மாதிரி படு காஷூவலாக இருக்கிறீர்கள்?”

அவர் உதடு பிரியாமல் கன்னம் மட்டும் லேசாகக் குழிய புன்னகை மாதிரி என்னத்தையோ உகுத்தார்.

என் தோள்களை அணைத்துக் கொண்டு “இதில் ஒரு தொழில் ரகசியம் இருக்கிறது” என்றார்.

நான் மிகுந்த ஆவலுடன் அவர் மேலே பேசட்டும் என்று அவரை உற்று நோக்கினேன்.

” மீட்டிங்னு சொன்ன உடனேயே நான் என்னைத் தயார் படுத்திக்க ஆரம்பிச்சுடுவேன்.. எப்படியும் ஃபிகர்ஸ்லாம் கேவலமாத் தான் இருக்கு.. இன்னிக்கு நேத்திக்கு இல்லயே..‌அம்பது வருஷமா கேவலமாத்தான் இருக்கு.. நம்மளால மாத்த முடியாதுன்னு நான் கிளார்க்கா இருந்த காலத்தில இருந்தே தெரிஞ்சு தான் இருக்கு.. யாராலயும் ஒண்ணும் பண்ண முடியாது..

அதுனால, நானே கண்ணாடி முன்னாடி நின்னுண்டு என்னையேக் கண்டபடி திட்டிப்பேன்.. காறித் துப்பற மாதிரி பாவலா பண்ணிப்பேன்.. எங்கங்கல்லாம் என்‌ பெர்ஃபாமன்ஸ் கேவலமா இருக்கோ, அதையெல்லாம் எனக்கு நானே சொல்லி சொல்லிக் கெட்ட கெட்ட வார்த்தையால திட்டிப்பேன்..

இன்ஃபாக்ட் எனக்கு அவ்வளவு கெட்ட வார்த்தையெல்லாம் தெரியாது தெரியுமோ? அதனால, கெட்ட வார்த்தைகளுக்காகவே, என் டிரைவர் கிட்டே, ஸ்பெஷலா ட்ரெயினிங் எடுத்துண்டேன்.. அவன் என்னை லூசுன்னு நினைச்சுண்டு இருந்துருப்பான்… போனாப் போயிட்டுப்போறது.. ஆரம்பத்துல என் வைஃப், என் குழந்தைகள்லாம் கூட ரொம்ப பயந்து போயிட்டாங்க..‌அப்பறம் என் சைக்காலஜி புரிஞ்சுண்டு ரொம்ப கோவாபாபரேட் பண்ண ஆரம்பிச்சாட்டங்க..

இப்பல்லாம், நான் என்னைத் திட்டிக்க ஆரம்பிச்ச உடனே என் வைஃப் டிவில சீரியலைக் கூட நிறுத்திடறா… என்னோட சுய வசவு, டீவி சீரியலை விட இன்ட்ரஸ்டிங்கா இருக்குன்னு ஒரு அபிப்ராயம் அவளுக்கு…

என் பையன் கூட “அப்பா முடிச்சுடாத.. இந்த தோசையை ஃபினிஷ் பண்ணிட்டு வந்துடறேன்னு” சொல்லிட்டு, கையக் கூட அலம்பாம, எச்சக் கையோட வந்து, அவங்க காலேஜ்ல லேட்டஸ்டா புழங்கற‌ கெட்ட வார்த்தையால நாலு திட்டு திட்டிட்டுப் போறான்..

இதுனால என்ன‌ ஆறது, சர்க்கிள் ஹெட் திட்டறது எனக்குக் காமடியா தெரியறது.. ஆக்சுவலா அவர் எக்ஸ்டெம்போராத் திட்டறதுனால, திரும்பத் திரும்ப அதே வார்த்தைகளையே யூஸ் பண்றார்.. அவர் திட்டெல்லாம் கொஞ்சம் அப்ஸலீட் ஆயிடுத்து தெரியுமோ.. இப்பல்லாம் டீவிலே ஒரே காமடியை டெய்லி பாக்கறா மாதிரி போர் அடிக்கறது.. யாராவது அவர் கிட்டே சொன்னாப் பரவால்லை.. நீதான் அவர் கிட்டே குளோஸாமே.. நல்ல மூடுல இருக்கும் போது நைஸா காதுல போட்டு வை.. டிரைவர், காலேஜ் பசங்கள்லாம் நல்ல சோர்ஸ்” என்றார்.

எனக்கு முகத்தில் ஈயாடவில்லை

2 Comments on “சோர்ஸ்/கணேஷ் ராம்”

  1. நகைச்சுவையாய்ச் சொல்லப்பட்டாலும் நிறுவனங்களின் சில அதிகாரிகளின் கூரிய பற்கள் பற்றிய கதை.. ஆனால் இப்போது இது மாறிக்கொண்டு வருகிறது.. இத் தலைமுறையை எதுவும் சொல்லாமல் வளர்த்து விட்டுவிட்டோம்.. அவர்களிடம் அவர்தம் வேலையைச் செய்யச் சொன்னாலே அதை வசவாக எடுத்துக் கொள்கிறார்கள்.. ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு மாறி விட்டோம்.. நடு என்பதே இல்லாமல்..

Comments are closed.