கடல்/க நா சு

கடலிலே பல்லாயிரக் கணக்கான
துயரங்கள் புதைந்து கிடக்கின்றன.
கற்பனையற்ற சென்னைவாசிகள்
மாலையில் பொழுது போக்க
ஆனந்தமாகக் கடற்கரைக்குச்
செல்கிறார்கள். கடலுக்கும்
ஆனந்தத்துக்கும் வெகுதூரம்
என்றறியாமல்.

உலகத்தின் துயரம் பூராவும்
கடலில் அடக்கம்
அதன் அலைகள் துயர கீதம்
ஓயாது இசைப்பது கேட்டிலையோ!
வடவாக்கினி தோன்றிய நாள்முதல்
ஆலகால விஷமும் மூதேவியும்
தோன்றிய நாள் முதல்
கடல் துயரத்தின் பிறப்பிடமாக
இருந்து வந்துள்ளது.

கடலில் உதிக்காத கற்பனை ஏது?
தரையில் தத்ரூபம் பயிலலாம்
கடலில் போன நிமிஷத்து உருவம்
இவ்விநாடி இருக்காது
அப்ஸ்டிராக்ட் ஆகட்டும்
ஸர்ரியலிஸமும்
உதிப்பது கடலிலே
அவற்றிலே ஆனந்தம்
கொள்ள இயலுமா
சொல்லுங்கள்.