பயணம்/க நா சு

தஞ்சையிலிருந்து சென்னைக்கு
பஸ் மார்க்கமாக

ஆகாச கங்கை
பஸ்டாப் மூலம் வானின்று இறங்கிவர
விரித்த செஞ்சடையயைத் தாங்கி
பாதாளத்தில் ஜாக்கிரதையாக இறங்கி ஓடவிட்டு
இரவு பூராவும்
பக்கத்து ஸீட்டு வாலிபனின்
தூக்கத்தில் தொங்கிய தலையைத்
தோளில் தாங்கி
இருமல் இளைப்பு உலுக்க
பஸ் உலுக்க
பதினொரு மணி பஸ்
பன்னிரண்டுக்குக் கிளம்பக்
கவிழாமல் கால்வாயில் இறங்காமல்
எதிர்ப்பட்ட லாரியில் மோதாமல்
சென்னை வந்து சேர
ஒரு இரவு கழிந்து
பகலின் பாதி கழிந்து
பன்னிரண்டு மணி ஆகியது
தெனாலிராமன் குதிரையில்
வந்திருக்கலாம். முன்னே
இரண்டொருவர் கடிவாளைப் பிடித்திழுக்கப்
பின்னே
இரண்டொருவர் பிரஷ்டம் தாங்கித் தள்ள
ஆட்கள் கிடைக்காததால்
செல்ல முடியவில்லை. பரமார்த்த குருவாக
இருந்தால் ஆறுபேர் சிஷ்யர்கள்
கிடைத்திருப்பார்கள்
விமர்சன சாம்ராட்டுக்கு
நண்பர்கள் கிடையாது.
நன்றாக எழுதுபவனுக்கு வாசர்கள்
கிடையாது. அரைகுறைப் பேராசிரியனுக்கு
நிறைய மூட மாணவ மாணவியர்
பக்கம் நிரப்பத் தெரியும்; அரசியல்
செய்யத் தெரியும்; பணம் பண்ணத் தெரியும்
வேறு என்ன வேண்டும்?