
இன்று ஆழிப்பேர்
அலையின் நினைவுநாள்
அழியாத துயரத்தை
கொடுத்த நாள்
இந்தோனேஷியாவில் உதித்த நீ
ஏன் உலகில்
பிரவேசித்தாய் ?
தண்ணீரே ஆடும் அலைகளே ஆழி
பேரலையாக ஏன்
மாறினாய்?
கரையில் உன் கனவுகளை
கலைக்கும் அலைகளே
எங்கள் கனவுகளை
ஏன் கலைத்தாய் ?
கரையில் தகர்ந்து போகும் தண்ணீர்
சுவர்களே எங்கள் வாழ்வை சுவரில்லா
சித்தரமாக்கி
விட்டாயே !
காற்றால் எழும் கடல் வீக்கங்களே
எங்கள் மனதில்
ஏற்படுத்திவிட்டாய்
தாக்கங்களை !
வாழ்கை வாழ்வதற்கு மீன் பிடிக்கும்
மீனவர்களின்
வாழ்வை அழித்து விட்டாய்.
நடைப்பயணம்… கால் பயணம்…
காலனின் பயணம்
ஆக்கிவிட்டாய்…
எங்கள் கால்களை அணைக்க வந்தாய்
என்று நினைத்தோம் எங்கள்
வாழ்வையே
அணைத்து
விட்டாயே….
அன்னையே வாழ்வை கொடுக்கும் கடல்
அன்னையே வாழ்வை பறிக்கலாமா ?
கடலே உன் பசிக்கு
உடல்களை புசித்து
விட்டாய்..
கொஞ்சி விளையாடும் சிறார்களை, எஞ்சி
நின்ற மாந்தர்களை வஞ்சித்து
விட்டாயே..
நடை பயணத்தில்
மண்ணில் பதிந்த
கால் வடுக்களை
மனதின் வடுக்களாய்
மாற்றி விட்டாய்..
கரையில் சீற்றத்தோடு
எங்களை இழுத்து
உன்னை கறைப்
படுத்திக் கொண்டாய்..
இது முறையா ? சரியா?
பச்சை , நீல நிற அழகியே எங்கள்
மனதில் கறுமை நிறம் பூசி விட்டாய்..
கடல் அலைகளே நீங்கள் கொடுத்த
எங்கள் கண்ணீர் அலை உங்களை விட பெரியது ….
**
