ஒரு சிறுதவறும் சனியும்/ஆர்.அபிலாஷ்

2017ஆம் ஆண்டு நான் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தில் கடும் நெருக்கடி. எனக்கு அங்கிருக்கவே பிடிக்கவில்லை. பல இடங்களில் வேலைக்கு முயன்று கொண்டே இருந்தேன். பெங்களூரிலும் தான் வேண்டாவெறுப்பாக முயன்றேன். இங்கே கிடைத்தது. சென்னையில் இங்குள்ள ஊதியத்தில் பாதி கிடைத்தால் கூட போதும், எந்த வேலையென்றாலும் போதும் என்றே நினைத்தேன். இன்னும் ஆறு மாதங்கள் பொறுத்திருந்தால் கிடைத்திருக்கலாம். ஆனால் பொறுமையில்லை. அதுதான் நான் அன்று செய்த தவறு. அத்தவறு என் வாழ்க்கையை இன்று தலைகீழாக்கி விட்டதே என நான் நோகாத நாளில்லை.
நான் பெங்களூருக்கு வருவதா வேண்டாமா என முடிவெடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த போது, ஜெயமோகனை அழைத்து அவரது அறிவுரையைக் கேட்டேன். உன் மொழி காதில் கேட்காத ஊரில் போய் இருக்காதே, ஒரு எழுத்தாளனுக்கு அது நல்லதல்ல என்றார். நான் அவருடைய அறிவுரையைக் கேட்டிருக்க வேண்டும். கேட்கவில்லை.
ஒரே ஒரு சிறிய முடிவு. என் மொத்த வாழ்க்கையும் சர்வ நாசமாகி விட்டது. நிம்மதி, மகிழ்ச்சி போய் விட்டது.

இதே போல ஒரு ‘சிறிய’ முடிவை எடுத்து இந்த ஊரில் இருந்தே கிளம்பி சென்னைக்கு வரும்படியாக நிகழ்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
எனக்கு கிரகபலனில் நம்பிக்கை பெரிதாக இல்லை என்றாலும் நளனின் கால் பாதத்தில் சனி புகுந்ததைப் போல என் உச்சந்தலையில் அன்று அதே சனி ஏறிவிட்டதோ எனத் தோன்றுகிறது. ஏனென்றால் நளனுக்கு நடந்த ஒவ்வொன்றும் எனக்கும் நடந்தது. இதற்கு மேல் இழக்க ஒன்றுமில்லை எனும் நிலையில் தான் நளன் மீண்டு வருவான். நான் அப்படி மீள்வேனா?