ஒரு பெரியவர் ரூபத்தில் வந்து அற்புதம் நடந்த நிகழ்ச்சி/ரா.வேங்கடசாமி

புத்தகம்-காஞ்சி மகானின் கருணை உள்ளம்

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

கல்யாண சுந்தரம் அய்யர், இப்போது திருச்சியில் இருக்கிறார். பிறந்தது திருச்சிக்கே அருகே ஒரு சிறு கிராமத்தில். திருப்தியான வாழ்க்கை. அதற்கு மேலே மகா பெரியவாளின் தீவிர பக்தர். ஏன் முரட்டு பக்தர் என்றே சொல்ல வேண்டும். ஒருமுறை காசிக்குச் சென்று தனது மறைந்த தந்தையாருக்குச் செய்ய வேண்டிய சடங்குகள் யாவற்றையும் செய்யவேண்டும் என்பது அவரது அவா.
காசிக்குப் போய் எங்கே தங்குவது, என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று தெரிந்து கொள்ள, சேலம் பெரியவா கிரக நிர்வாகி திரு.ராஜகோபாலை அணுகியிருக்கிறார். பல தடவை காசிக்குச் சென்று வந்த அனுபவம் திரு. ராஜகோபாலுக்கு. அவர் விபரமாக எல்லா வழிமுறைகளையும் சொல்லி, “தங்க வேண்டிய இடம் சங்கரமடம். இங்கே காஞ்சியில் உள்ள காஞ்சி மடத்தினரால் நிர்வாகிக்கப்படுவது. அங்கே மடத்திற்கு அருகே மகா பெரியவா ஸ்தாபித்த காஞ்சி காம கோடீஸ்வரர் கோவில் இருக்கிறது. அங்கேயும் அவசியம் போகவேண்டும்” என்று, அவருக்கு விளக்கம் சொல்லப்படுகிறது.
தன் பயணத் திட்டத்தை ஒழுங்காக அமைத்துக்கொண்ட கல்யாணசுந்தரம், தனது குடும்பத்துடன் காசிக்கு ரயிலில் புறப்பட்டுப் போனார். ஏற்கனவே எல்லா விவரங்களையும் அவர் தெரிந்து கொண்டதால், நேராக காஞ்சி மடத்திற்கே சென்று தங்கினார். அங்கே சென்றவுடன் தன் பிதுரார்களுக்குச் செய்ய வேண்டிய சடங்குகள் யாவற்றையும் செய்துவிட்ட திருப்தியில், காசி விஸ்வநாதரைத் தரிசிக்க கோவிலுக்குப் போனார்.
காசி விஸ்வநாதர், அன்னபூரணி தரிசனம், அவர் மனம் மகிழும் வண்ணம் கிடைத்தது. திருப்தியுடன் அவர் திரும்பிக் கொண்டிருந்தார். தான் தங்கியிருந்த சங்கர மடத்திற்கு,தன் குடும்பத்தாருடன் கோவிலில்இருந்து வெளியே வருவதற்குள் ஒரு சிறிய சந்தைக் கடக்க வேண்டும்.
மடத்திற்கு அருகே இருக்கும் காஞ்சி காமகோடீஸ்வரரை அவசியம் தரிசனம் செய்துவிட்டு வரவும் என்றும் அவருக்குச் சொல்லப்பட்டு இருந்தது. அந்தக் கோவிலை அங்கே ஸ்தாபிதம் செய்ததே காஞ்சி மகான் தான்.
கையில் ஒரு பிளாஸ்டிக் பையில், தனது முக்கியமான பொருள்களை வைத்து எடுத்துக் கொண்ட வந்த கல்யாண சுந்தரம் அய்யர், கோவிலுக்கு குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்கிறார்.செய்தபின், வெளிப் பிரகாரத்தில் அமர்ந்து, அடுத்து எங்கே போகவேண்டும் என்பதைப் பற்றி யோசிக்க, தன் கைப்பையில் இருந்த மஞ்சள் பையை எடுக்க திட்டமிடுகிறார். அதில் தான் அவர் திட்டமிட்ட காகிதங்கள், ரயில் டிக்கெட்,பணம் எல்லாமே இருந்தது. பையில் கையை விட்டவருக்கு ‘பகீர்’ என்றது.
மஞ்சள் பையைக் காணோம்
ஒரே ஒரு நிமிடம் ஆடிப் போனார்.
உரத்த குரலில்,”மகாபிரபு சர்வேஸ்வரா” என்று சப்தமிடுகிறார். கண்களில் நீர் தாரையாக வழிகிறது. எல்லாமே அவரது கையை விட்டுப் போனது போன்ற ஓர் உணர்ச்சி.
இனி செலவுக்கு என்ன செய்வது. குடும்பத்தாருக்கு ஆகாரத்துக்கு என்ன செய்வது. திரும்பிப் போக ரயில் டிக்கெட்டுகளும் அல்லவா அதில் இருந்தன. கண்கள் இருட்டிக் கொண்டு வர, அப்படியே தூணில் சாய்ந்து விட்டார் கல்யாண சுந்தரம். திடீரென எல்லாமே சூன்யமாகி விட்டதைப் போன்ற ஒரு நிலை.
“சர்வேஸ்வரா மகாபிரபு உன்னை நம்பித்தானே இவ்வளவு தூரம் குடும்பத்துடன் பயணித்தேன். இப்படி நிர்க்கதியாக விட்டு விட்டாயே?” என்று கதற ஆரம்பித்தார். குடும்பத்தார் கோவிலுக்குள் இருந்ததால், இவரது புலம்பல் அவர்களுக்கு உடனே தெரியவில்லை. தரிசனத்துக்கு வந்த பக்தர்கள், யாரோ மானசீகமாகவும், உரத்த குரலிலும் பகவானிடத்தில் முறையிட்டுக் கொண்டு இருக்கிறார் என்று நினைத்து தங்கள் வழியே சென்றனர்.
யாருமே இல்லாத அனாதை போலவும், தான் இந்த உலகத்தில் தனித்துவிடப்பட்டது போலவும் அய்யர் கதறிக்கொண்டு இருந்தார். மாப்பிள்ளை ஓரளவுக்கு உதவலாம். ஆனால் அவரால் இவ்வளவு செய்ய முடியுமா? மாப்பிள்ளையை செலவு செய்யச் சொல்வது நியாயமா? அடுத்தபடியாக கயாவுக்குப் போக வேண்டும். குடும்பத்தாரும் வெளியே வந்து அவருக்கு அருகே அமர்ந்தனர்.
திக்கித் திணறி தனக்கு நேர்ந்த கஷ்டத்தை அவர்களிடம் சொல்ல, அவர்களும் விக்கித்துப் போனார்கள். ஆனால் அய்யர் மனதில் மட்டும் குற்றச்சாட்டு.”மகாபிரபு உன்னையே அல்லும் பகலும் நினைக்கும் என்னை இப்படி சோதிக்கிறாய். இது நியாயமா? அப்படி நான் என்ன பாவம் செய்துவிட்டேன்.இந்த தண்டனை அடைவதற்கு?”
சுமார் இரண்டரை மணி நேரம் இந்த துக்கப்படலம் அரங்கேறிக் கொண்டிருந்த வேளையில், கோவிலுக்கு வருவோர், போவோர் யாரும் இவர்களைத் திரும்பி பார்க்காத நிலையில், ‘மகாபிரபு’ எங்கோ இருந்தோ இவர்களை ஆசிர்வதித்தார். எப்படி என்கிறீர்களா?
இவர்கள் எல்லோரும் கவலைப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், கோவிலுக்கு நேர் எதிரே ஒரு சைக்கிள் ரிக்‌ஷா வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய சற்றே வயதான பெரியவர் லுங்கி அணிந்திருந்தார். கல்யாண சுந்தர அய்யர் இருக்குமிடத்திற்கு நேராக வந்தார்.
அவரது கையில் ஒரு மஞ்சள் பை…..
“இது உன்னுடையதா பார்? வழியில் தவறவிட்டு விட்டாய்..” என்று அந்த மஞ்சள் பையைக் கொடுத்து வேகமாகத் திரும்பிப் போய்விட்டார்.(ஹிந்தி பாஷையில்)
பரவசத்தோடு பையை வாங்கிய அய்யர், முதலில் அதில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்றுதான் பார்த்தார். எல்லாமே வைத்தது வைத்தது போலவே இருந்தது. பணமும் அப்படியே இருந்தது. அதற்குப் பிறகு தான், பையைத் திருப்பிக் கொண்டு வந்து கொடுத்த நபருக்கு, நன்றி சொல்ல தலையை நிமிர்த்தினார் அய்யர். அவர் எங்கே இருக்கிறார்? அவர்தான் வந்த வேகத்தில் போய்விட்டாரே…இந்த ரூபத்தில் தனக்கு உதவிய அந்த நபர் வேறு யாராக இருக்க முடியும்? கோவிலில் இவ்வளவு கும்பல் நடமாடிக் கொண்டு இருக்கும்போது,அந்த ரிக்‌ஷா பெரியவர் தன்னிடம் நேராக வருவானேன், பையைக் கொடுப்பானேன்?
இது அந்தக் காஞ்சி மகானின் கருணை உள்ளத்தை தவிர, வேறு என்னவாக இருக்கமுடியும்.
கல்யாண சுந்தரம் அய்யர், இந்த சம்பவத்தை விவரிக்கும் போது,நமக்கெல்லாம் புல்லரிக்கிறது
மகாபெரியவா பிரத்தியட்ச தெய்வமாக தன் பக்தர்களுக்கு இன்னமும் உதவிக் கொண்டு தான் இருக்கிறார்.