ஹாஸ்டல் வாழ்க்கை/-நாகேந்திர பாரதி

பத்துக்குப் பத்து, இந்த ரூம்ல ஐந்து பேர் இருக்கணுமா. காலேஜ் ஹாஸ்டல் ரூமில் நுழைந்த சங்கருக்குத் திகைப்பு. தனது கிராமத்து வீட்டு நினைப்பு. முதலாம் வடக்குத் தெருவில் ஆரம்பித்து இரண்டாம் வடக்குத்தெரு வரை நீளும் அந்த வீட்டின் முன்னே பெரிய திண்ணைகள் இரண்டு பக்கமும் .அடுத்து பெரிய ஹால். அதற்கடுத்து தொடர்ச்சியாக இரண்டு சிறிய ஹால்கள் . அவற்றில் ஒன்று பூஜை ரூம். அடுத்தது பெண்கள் ரூம் அந்த நாட்களுக்காக. அடுத்து முற்றம் . திறந்தவெளியில் மாடிப்படிகளோடு . குளிப்பதற்கும், துணி துவைக்க, பாத்திரம் கழுவ, சில இடங்கள் தனித்தனியாக சிமெண்ட் போட்டு. அதன்பின் அடுப்படி .சாப்பிடும் இடம். பின்னே தோட்டம் .வேப்பமரம் , முருங்கை மரம், புடலங்காய் பீர்க்கங்காய் , பூசணிக்காய்ச் செடி கொடிகள். சின்ன கிரௌண்ட் ,நொண்டி விளையாட்டுக்கு ஏற்ற இடம். அதைத்தாண்டி கொல்லைக் கதவு வழி வெளியே சென்றால் இரண்டாம் வடக்குத்தெரு வந்துவிடும் .

அவ்வளவு பெரிய நீண்ட வீட்டில் பள்ளி வாழ்க்கை முழுக்க. இப்போது கல்லூரி ஹாஸ்டல் வாழ்க்கை. சின்ன ரூமில் . ஐந்துபேரும் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தார்கள் .மேலூர், கோவில்பட்டி, முதுகுளத்தூர், சிவகங்கை என்று. ஊர், குடும்ப விசாரிப்புகள் முடிந்து இரவு சாப்பாட்டை முடித்து விட்டு படுக்கும்போது ,பாய் ,தலையணை பக்கம் பக்கம் போட்டு இருந்த ஒரு சேரை அந்த டேபிளுக்கு அடியில் தள்ளி விட கனகச்சிதம் .புரண்டு படுத்தால் அடுத்தவர் மேல் கை படும் .கையைக் காலைப் பரப்பி வீட்டுத் திண்ணையில், இரவு இந்த மூலையிலிருந்து அடுத்த மூலைக்கு புரண்டு எழுந்த காலம் கனவுகளாக.

கல்லூரி ஹாஸ்டல் சாப்பாடு , காலையில் வாயில் பேஸ்டோடு பாத்ரூம் வாசலில் காத்திருப்பு , களிம்பு டம்ளரில் காபி , வாரத்திற்கு ரெண்டு நாள் மட்டன், கட்டடித்து சினிமா, விடுமுறை நாளில் சாயந்திரம் , உள்ளூர் உறவினர் வீடு, இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. கல்லூரி வாழ்க்கை பழகிவிட்டது .

ஆனால் ஹாஸ்டல் ரூம் மட்டும் கசந்தது .இரவு வந்தாலே ஏதோ சுதந்திரம் பறிபோனது போல். தூக்கம் சொக்கி வரும்போது இரண்டு பேர் ஒரு மணிவரை லைட்டைப் போட்டுக் கதை பேசுவார்கள் . ஒன்றும் சொல்ல முடியாது. போர்வையைத் தலைக்கு மேல் போர்த்தி தூங்க முயற்சிக்க வேண்டியது தான். வேறு வழி . இதற்கு நடுவில் சிலருக்குப் பக்கத்து ஊர் நண்பர்கள் வந்து இரவு தங்கி விடுவார்கள் . இடித்துப் பிடித்துப் படுத்துத் தூங்கிப் போவார்கள் . இவனுக்கு மட்டும் தூக்கம் வராது. எரிச்சல்.

ஏதாவது பண்டிகை விடுமுறைக்கு ஊருக்குப் போகும் போது அந்தத் திண்ணைத் தூக்கம் . சுகமோ சுகம். இந்த மூலையில் படுப்பவன் , தூக்கத்தில் புரண்டு புரண்டு , காலையில் அந்த மூலையில் எழுந்திருப்பான். இனிக்கும் தூக்கம். திரும்பிப் போகவே மனது வலிக்கும்.

ஒரு நாள், . நண்பர்கள் இருவர் ஊருக்கு சென்றுவிட்டார்கள் . கொஞ்சம் நிம்மதி . புரண்டு புரண்டு படுத்துத் தூக்கம். ஒரு முறை மற்ற நால்வருமே ஒரு வாரம் விடுமுறையில் ஊருக்குச் சென்றுவிட இவன் மட்டும் இந்த மூலையில் இருந்து அந்த மூலை வரை உருண்டு புரண்டு அனுபவித்தான்.

ஒரு நாள்தான். மறுநாள் ஏதோ குற்ற உணர்ச்சி . ஏதோ ஏக்கம். ‘என்ன இது தனியாக. சுந்தர் பாட்டை இரண்டு நாட்கள் கேட்காமல். மூன்றாம் நாள் மாலை ராமும், விவேக்கும் பேசும் கிண்டல்களை கேட்காமல் ஒரு மாதிரி இருந்தது. சுப்பிரமணியன் மிமிக்ரி கேட்காமல் போரடித்தது. வாய்ச் சண்டையில் கலந்து கொள்ளாமல் வாய் நமநமத்தது. ‘ டேய் சீக்கிரம் வாங்கடா, போர் அடிக்குதுடா’ .