
ஒரு கோப்பை தேநீரில்
பெரிதாய் என்ன இருந்துவிட போகிறது? .. என்கிறாய்…
இதோ.. கோப்பை முழுவதுமாய்
நிரம்பி வழிகிறது நின் காதல்…
சர்க்கரையோடு நீயிட்ட அக்கறையும்
இனித்தேக் கிடக்கிறது என் மனமெங்கும்…
பனித்துளியில் விழுந்திடா வானமென
பரவிக்கிடக்கிறாய் என்னுள்..
உந்தன் நெருக்கங்களில் திணறும்
காற்றென பரிதவிக்கிறேன் நான்..
எனக்கும் கொஞ்சம் பொறாமைதான்
உன்னிதழ் முத்தங்களை
இலவசமாக பெறும்
தேநீர் கோப்பையின் மீது..
என்னுள் கோபம் கொந்தளிக்கிறது
தேவதை உன் இதழ் ஒத்தடம் பெற்றதில்
திமிராய் காட்சியளிக்கும்
தேநீர் கோப்பையை காணும் போதெல்லாம்…
உந்தன் விரல்கள் தொட்ட ஸ்பரிசத்தில்
சூடான தேநீரும் சில்லிட்டு விட்டதாம்
சிலிர்த்துக் கொள்கிறது
தேநீர் கோப்பை…
உன்னிதழ்கள் பட்டதால்
இரட்டிப்பாய் இனிப்பாகிவிட்டதாம் தேநீர்
கர்வத்தில் என்னை
கடுப்பேத்திச் செல்கிறது…
இப்படி தான்…
ஒரு கோப்பை தேநீருக்குள்
கொஞ்சம் நான் நிறைய நீ
முழுவதுமாய் நம் காதல்…
ஆம்… இப்படி தான்…
நிரம்பி வழிகிறது
ஒரு கோப்பை காதல்…
