
புத்தகங்களை யாரோ
புரட்டும் சப்தம் கேட்டு
அறையை திறந்து பார்க்கிறேன்
நீண்ட நாட்களாக வாசிக்கப்படாமல்
புழுதி வளர்ந்து கிடந்த புத்தகங்களை
சன்னலூடாக வந்த காற்று
வாசித்துக் கொண்டிருந்தது
காற்று என்ன மொழியில்
வாசித்திருக்கும் என்பதெல்லாம்
எனக்கு அவசியமில்லை
வெளியில் வந்து பார்க்கிறேன்
வாசித்த சம்பவங்களை
கிளைகளில் அமர்ந்தபடி
இலைகளுடன் பகிர்ந்து கொண்டது
இருந்தும் திரும்பிச் செல்லும் போது
இறுதியாக வாசித்தது
எத்தனையாவது பக்கமென்பதை
காற்று நினைவில்
எழுதி வைத்திருக்குமா என்ன
ஒவ்வொரு முறை வரும் போதும்
முதல் பக்கத்திலிருந்து துவங்கினால்
காற்று புத்தகத்தை
எப்போது வாசித்து தீர்க்குமோ
